கோவை: பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்ட பா.ஜ.க உறுப்பினர் நந்தா இதுவரை கைது செய்யப்படாததை கண்டித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை த.பெ.தி.க அமைப்பினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்ட பா.ஜ.க உறுப்பினர் நந்தா இதுவரை கைது செய்யப்படாததை கண்டித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை த.பெ.தி.க அமைப்பினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் இந்து மதத்தையும் பிரதமர் மோடி குறித்தும் அவதூறு பரப்பியதாக இந்து முன்னணியினர் அளித்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், “ஹேர் லைன்ஸ் நந்தா” என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நந்தா என்ற பா.ஜ.க உறுப்பினர் கடந்த செவ்வாய்க்கிழமை பெரியார் குறித்து அவதூறாகப் பதிவிட்டார்.
இதையடுத்து, பா.ஜ.க உறுப்பினர் நந்தாவை, சண்முகநாதன் மீது போடப்பட்ட அதே பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் காவல் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அதே 3 பிரிவுகளின் கீழ் அன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், பா.ஜ.க உறுப்பினர் நந்தா இதுவரை கைது செய்யப்படாததால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக த.பெ.தி.க அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதனால், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று காலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்ற 50க்கும் மேற்பட்டவர்கள் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது, காவல் துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் அனிதா பேராட்டகாரார்களிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது, போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர் சுதந்திரமாக நடமாடி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததை அடுத்து கலைந்து சென்றனர்.