கோவை: வால்பாறையில் குடியிருப்புக்கு அருகே சிறுத்தை புலி தாக்கி மாடு பலியானதால் அச்சமடைந்துள்ள மக்கள் சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் குடியிருப்புக்கு அருகே சிறுத்தை புலி தாக்கி மாடு பலியானதால் அச்சமடைந்துள்ள மக்கள் சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது மாணிக்கா எஸ்டேட். இங்கு 300க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி வாசுகி. இவர் கணவர் சுடலைமுத்து இறந்து விட்டார். வாசுகி தோட்டத்தில் பணியாற்றுவதோடு மாடு வளர்த்து பால் விநியோகித்து ஜீவனம் செய்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல் காலையில் மாட்டை மேய்ச்சலுக்கு அனுப்பி உள்ளார். மாலையில் மாடு வீடு திரும்பாத நிலையில் மாட்டை தேடிய போது அவருடைய வீட்டிற்கு கீழ் உள்ள சாலையின் ஓரத்தில் மாடு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இது பற்றி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் தகவலறிந்து வந்த மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

விசாரணையில் மாட்டை சிறுத்தைப் புலிகள் கொன்று தின்றது தெரியவந்தது. தொடர்ந்து, வால்பாறை கால்நடை மருத்துவர் மெய்யரசன் மாட்டை உடல்கூறாய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாடு அங்கேயே புதைக்கப்பட்டது.

தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் மாட்டை சிறுத்தைப்புலிகள் கொன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சிறுத்தைப்புலிகளை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.