கோவை: வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிறுத்தை புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிறுத்தை புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான கரடிகள், புலிகள், சிறுத்தைகள், யானைகள் உள்ளன.
இந்நிலையில், வால்பாறை அடுத்த ஊசிமலை மட்டம் என்ற எஸ்டேட்டில் சிறுத்தை புலியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் சிறுத்தைப்புலியின் உடலை கைப்பற்றி ரொட்டிக் கடையிலுள்ள வன உயிரின மேலாண்மை மற்றும் மீட்பு மையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு மாவட்ட வன அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் சிறுத்தை புலியின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து வால்பாறை கால்நடை மருத்துவர் மெய்யரசன் சிறுத்தை புலியின் உடலை ஆய்வு மேற்கொண்டார். மேலும், சிறுத்தைப்புலியின் உடலின் முக்கிய பாகங்கள் கோவையில் உள்ள வன ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு பின் சிறுத்தை புலி இறந்ததற்கான காரணம் தெரியவரும். மேலும், இறந்தது ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்று வனத்துறை தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.