கோவை: கோவை மாநகர காவல்துறை மற்றும் ஓவியர் சங்கம் இணைந்து காந்திபுரம் சிக்னல் அருகில் 600 சதுர அடியில் கொரோனா வைரஸ் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்துள்ளனர்.
கோவை: கோவை மாநகர காவல்துறை மற்றும் ஓவியர் சங்கம் இணைந்து காந்திபுரம் சிக்னல் அருகில் 600 சதுர அடியில் கொரோனா வைரஸ் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்துள்ளனர்.

தனித்திரு! விழித்திரு! வீட்டிலிரு! கொரோனாவை ஒழிப்போம் விழிப்புணர்வு என்ற வாசகம் கொண்ட விழிப்புணர்வு ஓவியத்தை மாநகர காவல்துறையினருடன் இணைந்து கோவை மாவட்ட ஓவியர்கள் சங்கத்தினர் 15 பேர் வரைந்துள்ளனர்.

100 x 60 அடி அளவில் 600 சதுர அடியில் இந்த ஓவியத்தை ஐந்து மணி நேரத்தில் வரைந்து உள்ளனர்.
காவல்துறையினர் பங்களிப்புடன் வரையப்பட்ட இந்த விழிப்புணர்வு ஓவியங்களை காவல்துறை அனுமதி அளிக்கும் பட்சத்தில் நான்கு வழி மற்றும் ஆறு வழி சந்திப்புகளில் மக்கள் கூடும் சிக்னல் பாய்ண்ட்களில் வரைய தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த ஓவியம் 8000 ரூபாய் மதிப்பிலான வாட்டர் புரூப் எமல்சென் கொண்டு வரையப்பட்டு உள்ளது எனவும் 3 மாதம் வரை இந்த ஓவியம் அழியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஓவிய தொழிலில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு 2000 பேர் வரை இருந்ததாகவும் பிளக்ஸ் பேனர் வருகைக்கு பின்பு தொழில் நலிந்து தற்போது 250 பேர் மட்டுமே இந்த தொழிலில் உள்ளதாகவும் ஓவிய தொழில் அழியும் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.
இன்றும் ஓவிய தொழிலில் ஓவியர்கள் உள்ளனர் என்பதனை சொல்லவும் அவர்கள் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்து உள்ளது. காசநோய் உச்சகட்டத்தில் இருந்த போது கிராமம் கிராமமாக சென்று சுவர் விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிகளோ, பிளக்ஸ் இல்லாத நேரத்தில் ரேடியோ, நோட்டீஸ், சுவர் விளம்பரம் மட்டுமே இருந்தது. மக்களுக்கு சுவர் விளம்பரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல, சாலையில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அரசு விளம்பரங்கள் தனியார் நிறுவனங்களுக்கு மொத்தமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதனை மாவட்டம் வாரியாக, நேரடியாக ஓவிய சங்கங்களுக்கு வழங்கப்பட்டால் இந்த தொழில் அழியாமல் பாதுகாக்கவும் ஓவியர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த உதவிகரமாக இருக்கும் எனவும் அரசு இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என கோவை மாவட்ட கோரிக்கை ஓவியர் சங்க கெளரவ தலைவர் மணிராஜ் வேண்டுகோள் விடுத்தார்.
இதேபோல, ஊரடங்கை மீறி வெளியே ஊர் சுற்றித் திரியும் நபர்களை எச்சரிக்கும் விதமாக காந்திபுரம், சிங்காநல்லூர் போன்ற சாலைகளில் கொரோனா வைரஸ் போன்ற ஓவியங்களை வரைந்து காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.