கோவை: கோவை வரதராஜபுரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரியும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் தனிமைப்படுத்துவதற்கு போதிய வசதிகளுடன் இருப்பிடம் கிடைப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
கோவையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு கோவை வரதராஜபுரத்திலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் கொரோனா நோய் பரவல் காலத்தில் கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் பல்வேறு மருத்துவ சேவைகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா வார்டில் சிகிச்சை மேற்கொள்ளும் அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல, பயிற்சி மருத்துவர்கள் கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளித்த பின்பு கண்காணிப்புக்குள் வைக்கப்படுவார்கள். ஆனால், இஎஸ்ஐ மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் தங்க மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனியிடத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த அவசர காலகட்டத்தில் மருத்துவர்களுக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கும் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகள் வழங்க வேண்டும். ஆனால், நேற்றும், இன்று காலையும் தற்போது மதியம் வரை கோவை அரசு மருத்துவமனையில், தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு வழங்கும் அளவிற்கு கூட தரமான உணவுகள் எங்களுக்கு வழங்குவதில்லை என பயிற்சி மருத்துவர்கள் கடும் மன உளைச்சலுடன் எங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.
கொரோனாவை விரட்டியடிக்கும் போராட்டத்தில் முன்னணியில் இருப்பவர்கள் மருத்துவர்கள். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அது கொரோனா சிகிச்சையையும் பாதிக்கும்.
ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மேற்கண்ட மருத்துவர்களின் பிரச்சினையை பரிசீலனை செய்து மருத்துவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்கவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.