டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை 1173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு இன்றுடன் நிறைவுபெறும் நிலையில் பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை மற்ற நாடுகளை விட இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது எனவும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி காரணமாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்ததாக தெரிவித்தார்.
மேலும், கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களை முன்கூட்டியே சோதனை செய்ததாக தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அடுத்த ஒரு வாரம் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
மேலும், ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது. ஆனால், கொரோனா தடுப்பில் மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது என்றவர், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது என்றார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கை மேலும் நீட்டிப்பது அவசியமாக உள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா தொற்று மையங்களாக இருக்கும் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
அதேபோல, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு சில நிபந்தனைகளுடன் தளர்வுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றவர், ஏப்ரல் 20ம் தேதிவரை கண்டிப்புடன் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் எனவும் ஊரடங்கு காலங்களில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், தளர்வுகள் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரும் ஊரடங்கு காலத்திலும் மக்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றவர், பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தடுப்பு முக கவசங்களை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம் என்றார்.
மேலும், பொதுவெளியில் தனி மனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஊழியர்கள் யாரையும் பணியிலிருந்து நிறுவனங்கள் நீக்க வேண்டாம் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.