கோவை: கோவையில் ஹெல்ப் லைன் மூலம் விண்ணப்பித்த மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று மருந்துகள் மளிகை பொருட்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வழங்கி வருகிறது.
கோவை: கோவையில் ஹெல்ப் லைன் மூலம் விண்ணப்பித்த மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று மருந்துகள் மளிகை பொருட்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வழங்கி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் தினசரி வருமானம் இன்றி பலர் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் கோவை மாவட்ட மாற்றத்திறனாளி நலத்துறையின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான மருந்து பொருட்கள் மளிகை பொருட்களை வழங்கி வருகின்றனர். ஹெல்ப் லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு வீடு தேடி சென்று இப்பொருட்கள் வழங்கப்படுகிறது.
இது குறித்து மாற்றுத் திறனாளி அலுவலக ஊழியர் ஒருவர் கூறுகையில், நான்கு பேர் கொண்ட குழு மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தைச் சேர்ந்தவர் இப்பணி செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் தினமும் 20 பேருக்கு அந்தந்த பகுதியிலேயே சென்று வழங்கப்படுவதாகவும் வரும் நாட்களில் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நாள் ஒன்றுக்கு ஹெல்ப் லைன் மூலம் 50 முதல் 55 அழைப்புகள் பெறப்படுவதாகவும் இதுவரை நிலுவையில் இருந்த 340 பேருக்கு வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்த அவர், கடந்த 3ம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று பொருட்களை வழங்கி வருவதாகவும் கூறினார்.

மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் பழனிசாமி சார்பாக இன்று கோவை மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு தக்காளி, முள்ளங்கி, பீட்ரூட், அரசாணிக்காய், பீர்க்கங்காய், மிளகாய் உள்ளிட்ட 3 டன் காய்கறிகள் வழங்கியதாக தெரிவித்த அவர், உதகையில் இருந்து பெறப்பட்ட காய்கறிகளும் மதர் டிரஸ்ட், லயன்ஸ் கிளப், கொங்கு வேளாளர் சங்கம், விவசாய சங்கத்தினர் என பல்வேறு அமைப்பினர் உதவிகளுடன் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.