கோவை: கோவை மாநகரில் 33 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் என மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: கோவை மாநகரில் 33 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் என மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
144 தடை உத்தரவு உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மதியம் 1 மணி வரை மளிகை பொருட்களை வாங்க மக்கள் வெளியே வரலாம் என அறிவிப்பு உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தை அறியாமல் பல்வேறு காரணங்களைக் கூறி பொதுமக்கள் வெளியே சுற்றி வருகின்றனர். இவ்வாறு நடப்பவர்கள் மீது போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதமும் விதித்து வருகின்றனர்.
மேலும், நோய் தொற்று பரவாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு தொடர்ந்து கேட்டு கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவதாக கூறி சிலர் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தவர்கள் மட்டுமே இனி உணவு வழங்க அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்நிலையில் காவல்துறை ஆணையர் சுமித் சரண் மருத்துவர்கள், நோயாளிகளுடனான மருத்துவ ஊர்தி, பத்திரிக்கையாளர்கள் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே வாகனங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் இதனை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள் என தெரிவித்து உள்ளார்.
கோவை மாநகரில் நஞ்சுண்டாபுரம், போத்தனூர், கரும்புக்கடை, சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், தடாகம், பீளமேடு, கணபதி, சரவணம்பட்டி, காளப்பட்டி, சிங்காநல்லூர், மேட்டுபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் நிரந்தர சோதனை சாவடிகள் உள்ள நிலையில் தற்போது அவினாசி சாலை, மேட்டுபாளையம் சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் 33 கண்காணிப்பு மையங்களுடன் 47 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.