கோவை: உள்ளாட்சி நிர்வாகங்கள் அடுத்த 3 மாதத்திற்கு வரி வசூல் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: உள்ளாட்சி நிர்வாகங்கள் அடுத்த 3 மாதத்திற்கு வரி வசூல் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், இதுவரை கோவை மாவட்டத்தில் 221 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 16 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கோவையில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவருக்கு உணவு இல்லாத நிலை ஏற்படாது எனவும் தொழிற்சாலை நிர்வாகங்கள் தங்களின் தொழிலாளர்களை பார்த்து கொள்ள வேண்டும் என்றார்.
மாநகராட்சி மூலமாக 100 வாகனங்களில் வார்டு வாரியாக காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், உள்ளாட்சி நிர்வாகங்கள் அடுத்த 3 மாதத்திற்கு வரி வசூல் செய்யக் கூடாது என அறிவுறுத்தி இருப்பதாக கூறினார்.
கோவையில் உள்ள மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது எனவும் இத்தாலியை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அது போன்ற பாதிப்புகளை இங்கு ஏற்பட்டு விடாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிவித்தார்.
வரும் 2ம் தேதியில் இருந்து உதவி தொகை கொடுக்கப்படும் எனவும் டோக்கன் கொடுக்கப்பட்டு வரிசையில் இடைவெளி விட்டு நின்று உதவி தொகையை பொதுமக்கள் வாங்கி செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், உதவி தொகை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை எனவும் வங்கி கணக்கில் செலுத்தும் போது ஏற்கனவே இருக்கும் கடன் தொகைகளுக்கு கழிக்கப்பட்டு விட்டால் பயனாளிகளுக்கு அது பயனற்று போய்விடும் என்பதால் நேரிடையாக கையில் கிடைக்க பெற வேண்டும் என்ற நோக்கில் இது செயல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கோவைப்புதூர் எம். ஜி. ஆர். நகரைச் சேர்ந்த ஜெய்ஸ்னு ஸ்கேட்டிங் வாங்குவதற்காக சேமித்து வைத்த ரூ.6500 பணத்தை கொரோனா நிதிக்காக நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணி அவர்களிடம் வழங்கினார்.