கோவை: கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் கிளப்பி வீடியோ வெளியிட்டு வருவதாக எழுந்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.
கோவை: கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் கிளப்பி வீடியோ வெளியிட்டு வருவதாக எழுந்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.
மருத்துவத் துறையை நம்பாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்கலாம் என்ற பரபரப்பான கருத்தை வெளியிட்டு கோவையில் கைது செய்யப்பட்டவர் ஹீலர் பாஸ்கர். இவர் ஆங்கில மருத்துவங்கள் வணிக ரீதியானது என்றும் அனைத்து வகை நோய்களுக்கும் எளிய முறையில் மருத்துவ சிகிச்சை உள்ளது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில், இவர் கொரோனா வைரஸ் குறித்தும் அதன் மருத்துவங்கள் குறித்தும் தொடர்ச்சியாக தனது கருத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
இதனிடையே, செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் தவறான தகவல் பரப்பும் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் கிளப்பியதாக குனியமுத்தூர் போலீசார் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்த அவர்கள் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தற்போது கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் கிளப்பியதாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் ரமேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 153 A, 504, 505(i) ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மணிகண்ட ராஜா, ஹீலர் பாஸ்கரை வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.