கோவை: கொரோனா வைரஸ் காரணமாக ஐவுளித்தொழிலில் தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கு வங்கிகள் ஓராண்டு கால அவகாசம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் அவர்களை கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளதாக சைமா தலைவர் அஷ்வின் சந்திரன் தெரிவித்தார்.
கோவை: கொரோனா வைரஸ் காரணமாக ஐவுளித்தொழிலில் தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கு வங்கிகள் ஓராண்டு கால அவகாசம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் அவர்களை கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளதாக சைமா தலைவர் அஷ்வின் சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் அஷ்வின் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகளவில் மக்களின் வாழ்வையும், தொழிற்துறை உற்பத்தி நடவடிக்கைகளையும், வியாபாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விடவில்லை. ஜவுளி ஆலைகளில் பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களை சார்ந்தவர்கள். தமிழக தொழிலாளர்கள் பொது போக்குவரத்து வசதியையே உபயோகப்படுத்தி பணிக்கு வருகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் குறிப்பாக நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அரசு எடுத்துவரும் விழிப்புணர்வு மற்றும் பல்வேறு காரணங்களால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் வேலைக்கு வருவதில்லை என்பதோடு, அவர்கள் சொந்த மாநிலங்களுக்கே திரும்பிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலைமை மேலும் மோசமாகி அது ஒட்டு மொத்த உற்பத்தியை முடக்கும் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தம், வணிக வளாகங்கள் மூடல் போன்ற நடவடிக்கைளால் ஜவுளிப் பொருட்களுக்கான தேவை பெருமளவில் குறைந்துள்ளது. இதனால், ஜவுளித்தொழில் நிறுவனங்கள் எதிர்பாராத பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. ஜவுளித்தொழில் அதிக மூலதனத்தையும், அதிக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கும் துறையாக இருப்பதனால், தற்போதைய சிக்கலான சூழ்நிலையில் இருந்து மீள அரசின் உடனடி உதவி தேவைப்படுகிறது.
எனவே, ஐவுளித்தொழிலில் தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கு வங்கிகள் ஓராண்டு கால அவகாசம் (ஏப்ரல் 1, 2020 முதல் மார்ச் 31, 2021) அளிக்க உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் அவர்களை கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
சைமா தலைவர் மேலும் கூறுகையில், இது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை இதற்கு முன் ஜவுளித்தொழில் சந்திக்கவில்லை என்றும், அதனால் ஜவுளித்துறையினருக்கு மேற்படி அரசின் உதவி உடனடியாக தேவை என்றும் கூறியுள்ளார். அவ்வாறு ஒரு வருட கால அவகாசம் அளிக்கும்பட்சத்தில், அது ஜவுளித்துறையினரை தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள உதவுவதோடு, தொழிலை காப்பாற்றவும் வழி வகுக்கும் என்று அஷ்வின் தெரிவித்தார்.