திருப்பூர்: முக கவசத்தை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர்: முக கவசத்தை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்ற செய்முறை விளக்கத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. இதை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அவர்கள் திறந்து வைத்தார்.
இதனை அடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான அமராவதி சோதனைச்சாவடி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சந்தேகப்படும் நபர்கள் இருந்தால் அவர்களின் ரத்த மாதிரியை சோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் எவருக்கும் கொரானா வைரஸ் வரவில்லை என்று தெரிவித்தார்.
பேருந்து நிலையங்கள், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகம் ஏற்பட்டால் தொடர்பு கொள்வதற்கு கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கோவில்கள், திரையரங்குகள் ஆகியவையும் மூடப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், திருப்பூர் பின்னலாடை துறையினர் இடம் ஆலோசனை மேற்கொண்டு முகக் கவசம்(MASK) தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் முக கவசத்தை அதிக விலையில் விற்பவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.