கோவை: கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் முக கவசம் அணிந்து வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் முக கவசம் அணிந்து வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு வரும் 31ம் தேதி வரை பொழுதுபோக்கு அம்சங்களுக்கும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்கும், பொதுமக்கள் கூடும் பல்வேறு துறைகளுக்கும் தடை விதித்துள்ளது.
இதனால் இன்று காலை முதல் கோவை மாநகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல, வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள் என பல்வேறு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி உள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிந்து பணி செய்ய வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் துறையினர் காவல் நிலையங்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் முக கவசம் அணிந்த படி பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம் காவல் எல்லையில் உள்ள சோதனைச் சாவடி, சிங்காநல்லூர் காவல் எல்லையிலுள்ள சோதனைச்சாவடிகளில் முக கவசம் அணிந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல போக்குவரத்து போலீசாரும் முக கவசம் அணிந்து சாலைகளில் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.