கோவை: தமிழக அரசியலில் டிடிவி தினகரன் ஒரு கொரோனா வைரஸ் எனவும் சசிகலாவின் பணத்தை கொள்ளையடிக்க தினகரன் நாடகமாடி வருவதாகவும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அரசியலுக்கு வரமாட்டார் நேராக வீட்டிற்கு தான் செல்வார் என அதிமுக நிர்வாகி பெங்களூர் புகழேந்தி தெரிவித்தார்.
கோவை: தமிழக அரசியலில் டிடிவி தினகரன் ஒரு கொரோனா வைரஸ் எனவும் சசிகலாவின் பணத்தை கொள்ளையடிக்க தினகரன் நாடகமாடி வருவதாகவும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அரசியலுக்கு வரமாட்டார் நேராக வீட்டிற்கு தான் செல்வார் என அதிமுக நிர்வாகி பெங்களூர் புகழேந்தி தெரிவித்தார்.
கோவை சவுரிபாளையம் பகுதியில் உறவினர் இல்லத்தில் அதிமுக நிர்வாகி பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பட்ஜெட் சிறப்பான பட்ஜெட் எனவும் துணை முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
கட்சி என்ற பெயரில் டிடிவி தினகரன் செய்யும் காமெடிக்கு அளவே இல்லை எனவும் சின்னம் இல்லாமல் தினகரன் அலைந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஆர்.கே நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டு வழங்கியதற்கு அவர் பதில் சொல்ல வேண்டுமென்றும் முக்குலத்தோர் பெயரை சொல்லி தென்மாவட்டங்களில் அவரால் ஓட்டு வாங்க முடியாது என்றார்.
நடிகர் ரஜினி குறித்து பேசுகையில், மக்கள் ரஜினியை வரவேற்பது சந்தோஷம் என அவரிடம் கூறியதாகவும் ஆனால், அவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. எழுச்சி, புரட்சி ஏற்படும் என்கிறார், ரஜினி எந்த எழுச்சியை கூறுகிறார் என தெரியவில்லை என்றார். கட்சி வேறு ஆட்சி வேறு என்கிறார். கட்சியும் ஆட்சியும் வேறு வேறு இல்லை நகமும் சதையும் போல இருப்பதால் ஆட்சி உள்ளது தான் கட்சி. ரஜினி தெளிவாக தான் பேசுகிறாரா என தெரியவில்லை எனவும் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என அவர் கூறுவது எதன் அர்த்தத்தில் சொல்கிறார் என்பது தெரியவில்லை என்றார்.
சர்வசாதாரணமாக முதலமைச்சர் ஆவது என்பதெல்லாம் இங்கு நடக்காது எனவும் அரசியலில் பல ஆண்டுகாலம் உழைக்க வேண்டும் எனவும் திடீரென வந்து முதலமைச்சர் ஆவேன் என்று கூறினால் மக்கள் சிரிப்பார்கள் என்றவர், அமுமுகவில் இருந்து வெளியேறிய தனக்கு அதிமுகவில் இதுவரை பதவி வேண்டும் என்று கேட்கவில்லை எனவும் எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்வேன் என்று தெரிவித்தார்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அரசியலில் எந்த மாற்றமும் நடக்காது எனவும் டிடிவி தினகரன் சசிகலாவை சிறையில் சந்திக்க யாரையும் அனுமதிப்பதில்லை என குற்றம்சாட்டினார். சசிகலாவின் பணத்தை கொள்ளையடிக்க தினகரன் நாடகமாடி வருவதாகவும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அரசியலுக்கு வரமாட்டார், நேராக வீட்டிற்கு தான் செல்வார் என்றார். சசிகலாவை சிறையில் இருந்து அழைத்து வர யாருக்கும் மனம் இல்லை என்றும் தினகரன் ஒரு பசுந்தோல் போர்த்திய புலி எனவும் தமிழக அரசியலில் டிடிவி தினகரன் ஒரு கொரோனா வைரஸ் என்று கூறினார்.
மேலும், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஊடகங்கள் கட்சியால் கிடைக்க பெற்றதாகவும் அவற்றைக் கைப்பற்ற வேண்டும் என்பது தனது ஆசை எனவும் முதல்வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் என்றார். அந்த சொத்து மக்களை சென்றடைய வேண்டும் அதை யாரும் அனுபவிக்க விட மாட்டேன் என்றவர், அதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார். தினகரன் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை வைத்திருப்பதாகவும் கஜா புயலின் போது தனது சொந்த மாவட்டம் தஞ்சை மக்களுக்கு குறைந்தது 500 வீடுகள் கட்டிக் கொடுத்து இருக்கலாம். ஆனால், மக்களுக்காக எந்த நல்லதையும் செய்யாதவர் தினகரன் என குற்றம்சாட்டினார்.