கோவை: கிருமிநாசினி போதுமான அளவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிக விலைக்கு விற்பது, தரமில்லாத கிருமிநாசினி விற்பது போன்றவை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி எச்சரித்துள்ளார்.
கோவை: கிருமிநாசினி போதுமான அளவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிக விலைக்கு விற்பது, தரமில்லாத கிருமிநாசினி விற்பது போன்றவை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று நடைபெற்றது. மேலும், இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் நிலையில் ஆட்சியர் அலுவலகம் வரக்கூடிய பொது மக்களுக்கு கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. அப்போது, ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கையினை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவை மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள், உள்நாட்டு பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனவும் கேரளாவில் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில், மாநில எல்லையில் 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி இடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இன்று மாலை முதல் அது செயல்பாட்டிற்கு வரும் என்றார். இரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாநில எல்லையில் உள்ள கல்லூரிகளில் படிப்பதால் கல்லூரி நிர்வாகங்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
கோவையில் உள்ள மால்கள் திரையரங்குகள் போன்றவற்றை மூடுவதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது எனவும் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 10 பேரில் 8 பேருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர்களின் சளி மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் அவர்களுக்கான ரிசல்ட் இரு தினங்களில் வந்துவிடும் என தெரிவித்தார்.
மேலும், அங்கன்வாடிகளுக்கு இதுவரை விடுமுறை அளிக்கப்படவில்லை என தெரிவித்த அவர், கிருமிநாசினி போதுமான அளவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிக விலைக்கு விற்பது, தரமில்லாத கிருமிநாசினி விற்பது போன்றவை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கேரள மாணவர்கள் இங்கேயே தங்கிப் படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தினமும் கேரளா சென்று வரும் மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் இன்று முதல் எல்லையோரத்தில் உள்ள கல்லூரிகளில் இருந்து தினமும் அறிக்கை பெறப்படும் என்றார். இது தொடர்பாக இன்று கல்லூரி நிர்வாகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தெரிவித்த ஆட்சியர் ராசாமணி, வரும் மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது என தெரிவித்தார்.