கோவை: வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேயிலை தோட்டப்பகுதியில் முகாமிட்டுள்ள செந்நாய்கள் கடமானை வேட்டையாடிய நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில், நேற்றிரவு தேயிலை தோட்டப்பகுதியிலிருந்து கடமான் ஒன்றினை செந்நாய்கள் துரத்தி வந்தன. செந்நாய்களிடம் இருந்து தப்பிக்க ஆற்றுக்குள் குதித்த மானை 20க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஆற்றில் பாய்ந்து கொன்று தின்றன. மற்ற மான்களின் சத்தம் கேட்டு எழுந்த மக்கள், மானை செந்நாய்கள் சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். குடியிருப்புகளுக்கு மிக அருகில் செந்நாய் கூட்டம் வந்துள்ளதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, தகவலறிந்து வந்த வனத்துறையினர், இறந்த மானை பார்வையிட்டனர். மேலும் இப்பகுதியில் செந்நாய்கள் முகாமிட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து இறந்த மானின் உடல் ஆற்றுப்பகுதியில் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு ஆற்றில் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, வனத்துறையினர் இறந்த மானின் உடலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.