கோவை: வயது மூப்பு காரணமாக நடக்க முடியாத நிலையில் காவல் ஆணையர் அலுவலத்திற்கு புகார் அளிக்க வந்த 86 வயது மூதாட்டியிடம், அவர் இருக்கும் இடத்திற்கே சென்று துணை ஆணையர் மனுவை வாங்கி உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள் (86) இவர் தனது தங்க நகை அடகு வைத்தது தொடர்பாக புகார் அளிக்க கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். அப்போது, காவல் ஆணையர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு துணை ஆணையரிடம் மனு அளிக்க வேண்டும் என்று அந்த மூதாட்டி கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு துணை ஆணையரின் அறை கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ளது. ஆனால், மூதாட்டியால் மாடிப்படி ஏறிச்செல்ல முடியவில்லை. நடக்கவே சிரமப்பட்ட அந்த மூதாட்டியை காவல் ஆணையர் அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள நாற்காலியில் அமர வைத்த போலீசார் மூதாட்டி குறித்த தகவலை துணை ஆணையர் பாலாஜி சரவணனுக்கு அளித்தனர்.
இதையடுத்து தகவலறிந்த அவர், உடனடியாக மூதாட்டி அமர்ந்திருந்த தரை தளத்திற்கே வந்தார். மேலும், மூதாட்டியிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு, இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டதோடு, மூதாட்டியை ஆட்டோ மூலம் வீட்டுக்கு அனுப்புமாறும் உத்தரவிட்டார்.
காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் முறையான மரியாதை வழங்குவதில்லை என ஆங்காங்கே பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், கோவையில் துணை ஆணையர் ஒருவர் மூதாட்டிக்கு இரக்கம் காட்டிய சம்பவம் பொதுமக்களையும், போலீசாரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.