கோவை: கோவையில் காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்க வந்த இளைஞரை லஞ்சம் கேட்டு பெண் தலைமை காவலர் தாக்கியதாக ஊடகங்களில் வந்த செய்தியை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர் கிருஷ்ணவேணி. இவர் புகார் அளிக்க வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து தலைமைக் காவலர் கிருஷ்ணவேணி இளைஞரை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்கள் வாயிலாக வெளியானது.
இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக இளைஞரைத் தாக்கிய கிருஷ்ணவேணி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளியானது. அந்தச் செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு பெண் தலைமை காவலர் தாக்குதல் நடத்தியது குறித்து கோவை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.