கோவை: குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு போராட்டத்தினால் பாஜக வாக்கு வங்கி அதிகரித்து வருவதாகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஆதரவு அளித்து வருவதாகவும் ஆனால், கமல்ஹாசனுக்கு அச்சட்டம் குறித்த தெளிவு இல்லை எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை: குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு போராட்டத்தினால் பாஜக வாக்கு வங்கி அதிகரித்து வருவதாகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஆதரவு அளித்து வருவதாகவும் ஆனால், கமல்ஹாசனுக்கு அச்சட்டம் குறித்த தெளிவு இல்லை எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி விவகாரத்தில் மத பதட்டத்தை ஏற்படுத்தும் விதத்தில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வாக்களித்த 38 எம்.பி.க்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், எதிர்த்து வாக்களித்த தேனி எம்.பி. ரவீந்தர்நாத் தாக்கப்பட்டார் என கூறிய அவர், மதவாத தீய சக்திகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் திருப்பூரில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்ற நீதிபதிகளை வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் சிலர் மிரட்டியுள்ளனர் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும், பெருந்துறை, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூரில் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் ஆவணங்கள் எதுவுமின்றி தங்கி இருக்கின்றனர் எனவும் வங்கதேசத்தில் இருந்து வந்து தங்கியிருப்பவர்களை கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். சிஏஏவிற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என கூறிய ஹெச்.ராஜா, இந்து விரோதமாக பேசினால் எதிர்வினை வரத்தான் செய்யும் என்றார். அந்நியனுக்கு குடியுரிமை வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் தேச விரோதமாக போராட்டத்தை தொடர்ந்தால் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு தருவார்கள் எனவும் மாவட்ட, ஒன்றிய அளவிலான திமுகவினர் தலைமை சரியில்லை என கூறி வருவதாகவும் கட்சியை விட்டு வெளியேறுவது குறித்து என்னோடு பேசி கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் கூறினார்
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் தமிழக ஆட்சியை கலைப்போம் என தான் எங்கும் சொல்லவில்லை எனவும் சிலர் விஷமத்தனமாக பரப்பியுள்ளனர் என தெரிவித்த ஹெச்.ராஜா, நடிகர் ரஜினிகாந்த் சொன்ன ஏமாற்றம் பற்றி பின்னால் சொல்வதாக கூறியுள்ளார் எனவும் அது அவரது கட்சி தொடர்பானது விஷயம் எனவும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி குறித்து பேசலாம் என தெரிவித்தார்.
மேலும், குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு போராட்டத்தினால் பாஜக வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது எனவும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஆதரவு அளிக்கிறார், ஆனால் கமல்ஹாசனுக்கு அச்சட்டம் குறித்த தெளிவு இல்லை எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.