கோவை: கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தவரை பெண் தலைமை காவலர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து தலைமை காவலர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

கோவை மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருபவர்களையும், அவர்களின் உறவினர்களையும் அவமரியாதையாக நடத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

இதில், குறிப்பாக பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமைக் காவலர் ஒருவர், புகார் அளிக்க வருபவர்களிடம் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் தாக்குதல் நடத்துவதாக எழுந்த புகார்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோக்களாக வெளியானது. மேலும், இந்த வீடியோவில் புகார் அளிக்க வந்த நபரை, அந்த தலைமை காவலர் சரமாரியாக தாக்கி உள்ளே இழுத்துச் செல்லும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சிலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டில் சிக்கிய பெண் தலைமை காவலர் கிருஷ்ணவேணி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.