கோவை: திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விளைநிலங்களில் பெட்ரோலிய குழாய் அமைப்பது விவசாயிகள் கடுமையாக பாதிக்கும் செயல் எனவும் இதற்கான அனுமதியினை வழங்கிய எடப்பாடி அரசிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை: திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விளைநிலங்களில் பெட்ரோலிய குழாய் அமைப்பது விவசாயிகள் கடுமையாக பாதிக்கும் செயல் எனவும் இதற்கான அனுமதியினை வழங்கிய எடப்பாடி அரசிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது ;-
கோவை மாவட்டம் இருகூர் முதல், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில், விவசாய விளைநிலங்களில் குழாய் பதித்து பெங்களூரு தேவனகொந்தி வரை, பெட்ரோலிய எண்ணெய் கொண்டு போகும் திட்டத்தை (BPCL - IDPL) பாரத் பெட்ரோலிய நிறுவனம் அறிவித்தது.
இதில் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் சட்டம் 1962-இன்படி, எண்ணெய்க் குழாய் பதிப்பில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விபத்துகள் நேர்ந்தாலோ, நிலத்தின் உரிமையாளர்களே பொறுப்பு ஆக்கப்படுவர். இச்சட்டத்தில், 2012-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, நில உரிமையாளர்கள் நிலத்தையும் ஒப்படைத்து விட்டு, அதில் பதிக்கப்பட்ட குழாய்களையும் காவல் காக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழாய் பதிக்கப்பட்ட நிலங்களில் தென்னை, மா போன்ற மரப்பயிர்கள் வளர்க்கக் கூடாது எனவும், குடியிருப்புகள், மாட்டுச் சாலைகள், கோழிப் பண்ணைகள், ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்ட எவ்விதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது, மேலும் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிபந்தனைகளோடு உள்ள இந்தத் திட்டத்தை அறிவித்தபோதே, விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் இதுவரை அரசு அதனை கவனத்தில் கொள்ளாமல் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம், விளைநிலங்களில் அளவீடு செய்யும் பணியைத் தொடங்கியது. இதற்கு எதிராக 7 மாவட்டங்களின் விவசாயிகள் அறப்போராட்டங்களில் இறங்கினர்.
அதைப் பொருட்படுத்தாமல், பொது மக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தாமல், தான்தோன்றித்தனமாக, பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் சட்டம் 1962-இன்படி, 317 கிலோ மீட்டர் தொலைவிற்கு, 6000க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 1300 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி, பயன்பாட்டு உரிமையை எடுத்துக் கொள்ள, பாரத் பெட்ரோலிய நிறுவனம் குறிப்பு ஆணை வெளியிட்டு இருக்கின்றது. இதற்கு, எடப்பாடி பழனிசாமி அரசுதான் காரணம் என குற்றம் சாட்டினார். மேலும், 'விவசாயிகளின் காவலர்’ என்று கூறிக் கொள்ளும் முதல்வர், விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை தட்டிக் கழித்து விட்டு, விளைநிலங்களைப் பாழ்படுத்தும் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது வேதனை அளிப்பதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய்க் குழாய்களை விளைநிலங்களில் பதிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, சாலை வழியாக எடுத்துச் செல்ல தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மார்ச் 9ம் தேதி சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிப்பதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.