கோவை: கோவையில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் ஆனந்த்(33), இன்று இரவு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, கோவை நஞ்சுண்டாபுரம் பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள பாலத்தின் அருகே மர்ம நபர்கள் சிலர் தாங்கள் கொண்டு வந்திருந்த இரும்பு கம்பியை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஆனந்தின் தலை, முதுகு மற்றும் பல்வேறு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றனர்.
இந்தநிலையில் சுதாரித்துக் கொண்ட ஆனந்த் உடனடியாக அவருடைய நண்பர் ஹரிக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் நண்பர், அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் ஆனந்தை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

இதையடுத்து தகவலறிந்து வந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் மேல்சிகிச்சைக்காக பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு பிஎஸ்ஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.