கோவை: கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.
கோவை: கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.
கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவை மாவட்ட காவல் தெய்வமாக போற்றப்படுகிறது. இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் சுப முகூர்த்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வாடிக்கையான ஒன்று.

இந்நிலையில், பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலின் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர்நிலை திடலில் துவங்கி ராஜவீதி, ஒப்பணகார வீதி, ஐந்து முக்கு வழியாக முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த 13ம் தேதி பூச்சாட்டுடன் விழா தொடங்கி கொடியேற்றம், திருவிளக்கு வழிபாடு, திருக்கல்யாணத்திற்கு பிறகு இன்று நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியை பேரூர் ஆதீனம் தவத்திரு.மருதாச்சல அடிகளார் துவக்கி வைத்தார். இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், காமட்சிபுர ஆதீனம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு கோவை ராஜவீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். தேர் வந்த வழியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருபுறமும் நின்று பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், தேர் திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் என்பரது 3 பவுன் தங்க நகையை திருடிச் சென்றதாக புகார் எழுந்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.