கோவை: கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து முன்னணியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவத்தையடுத்து போலீசார் தலைமறைவாக உள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை: கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து முன்னணியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவத்தையடுத்து போலீசார் தலைமறைவாக உள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அருகே நேற்று மாலை ஒரு பெண் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் கேரளா பதிவு எண் கொண்ட காரும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கும் காரை ஓட்டி வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
இதையடுத்து, பிரச்சினைக்குரிய இடத்திற்கு வந்த ஒரு தரப்பினர் காரை ஓட்டி வந்தவர்களுக்கு ஆதரவாக பேசினர். இதைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த பெண் தனது சகோதரர் செல்வாவிற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் செல்வாவுடன் சம்பவ இடத்திற்கு வந்த அசோக், ராசு, சண்முக சுந்தரம், சச்சு, தினேஷ் மற்றும் கிரன் ஆகியோர் எதிர்தரப்பினரானா கார்த்திக், ஜெரால்ட் மற்றும் ஹரீஷ் ஆகியோரை தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் தாக்கினர்.
இதில் காயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரிவாளால் தாக்கிய 6 பேர் மீது துடியலூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 147,148, 324,307 மற்றும் 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பேரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்றும் தாக்குதல் நடத்திய அசோக் உட்பட சிலர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல, இவர்களுக்குள் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாகவே தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.