கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற முடியாது என்று சொல்வது ஆட்சியாளர்களின் இறுமாப்பை காட்டுகின்றது எனவும் இன்று டெல்லியில் நடைபெறும் சம்பவங்கள் 2002ல் குஜராத்தில் ஏற்பட்ட சம்பவங்களை நினைவு படுத்துகின்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற முடியாது என்று சொல்வது ஆட்சியாளர்களின் இறுமாப்பை காட்டுகின்றது எனவும் இன்று டெல்லியில் நடைபெறும் சம்பவங்கள் 2002ல் குஜராத்தில் ஏற்பட்ட சம்பவங்களை நினைவு படுத்துகின்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சி.ஏ.ஏ சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதில் இருந்து நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருவதாகவும் குடியுரிமைக்கு மதம் ஆதாரமாக எடுத்துக்கொள்ள கூடாது எனவும் இந்தியாவின் மதசார்பற்ற ஜனநாயகம் தகர்க்கப்படுகின்றது என்றவர், சி.ஏ.ஏ வை தனியாக பார்க்கக் கூடாது எனவும் என்.பி.ஆர்,என்.ஆர்.சி ஆகியவற்றுடன் சேர்த்துப் பார்த்து வேண்டும் என்றும் இந்த சட்டம் இஸ்லாமியர் மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும் எதிரானது என தெரிவித்தார்.
டெல்லியில் இன்று சாதாரண மக்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர் என கூறிய அவர், டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை கலங்கப்படுத்த ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க முயற்சிக்கின்றன எனவும் கொந்தளிப்பான நிலையை இவர்கள் உருவாக்கி இருக்கின்றனர் என தெரிவித்தார். பா.ஜ.க அமைச்சர்தான் டெல்லியில் போராடுபவர்களை சுட்டுத்தள்ளுங்கள், பாலியல் பலாத்காரம் செய்யுங்கள் என சொல்கின்றனர் என கூறிய டி.ராஜா, டெல்லி கலவரத்தில் இறந்தவர்களில் பாதிக்கும் மேல் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து இருக்கின்றனர் எனவும் துப்பாக்கி கலாச்சாரம் இங்கு எப்படி வந்தது எனவும் கேள்வி எழுப்பினார்.
டெல்லி போலீசார் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனவும் கலவரத்தை கட்டுப்படுத்த டெல்லி போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இந்த கலவரத்திற்கு காரணமாக இருக்கின்றனர் எனவும் இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்த அவர், அமித்ஷா எதிர்கட்சிகள் மீது குற்றச்சாட்டை வைக்கின்றார் எனவும் இது அப்பட்டமான பொய் என தெரிவித்தார்.
டெல்லி போலீஸ் கலவரம் செய்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றதோ என்கின்ற எண்ணம் ஏற்படுகின்றது என கூறிய அவர், குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் சி.ஏ.ஏ சட்டத்தினை திரும்ப பெற வேண்டும் எனவும் கலவரத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், டெல்லி துணைநிலை ஆளுநரை அழைத்து குடியரசு தலைவர் பேச வேண்டும் எனவும் டெல்லியில் கலவரம் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இளம் தலைவர் கன்னையா குமார் மீது தேசவிரோத வழக்கு சுமத்த டெல்லி அரசு அனுமதித்துள்ளது என கூறிய அவர், கன்னையா குமார் மீதான வழக்கை அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் எதிர் கொள்வோம் என தெரிவித்தார். கன்னையா குமார் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்திற்காக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் பலன் அடைந்தது அமெரிக்க பொருளாதாரம் மட்டுமே என கூறிய அவர், சுதந்திரமான வெளியுறவு கொள்கையினை இந்தியா கைவிடுகின்றது எனவும் அமெரிக்க சார்பு நிலையை இந்த அரசு விரும்பி எடுத்துக்கொண்டு இருக்கின்றது என்று கூறினார்.
மேலும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற முடியாது என்று சொல்வது ஆட்சியாளர்களின் இறுமாப்பை காட்டுகின்றது எனவும் இன்று டெல்லியில் நடைபெறும் சம்பவங்கள் 2002ல் குஜராத்தில் ஏற்பட்ட சம்பவங்களை நினைவு படுத்துகின்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.