திருப்பூர்: திருப்பூர் அருகே ஸ்டேட் பேங்க் வங்கியின் ஜன்னலை உடைத்து ரூ.18 லட்சம் பணம் மற்றும் 500 பவுன் நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை 6 தனிப்படைகளை அமைத்து போலீசார் தேடி வரும் நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து தகவல் தரவில்லை என கூறி வங்கியின் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே ஸ்டேட் பேங்க் வங்கியின் ஜன்னலை உடைத்து ரூ.18 லட்சம் பணம் மற்றும் 500 பவுன் நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை 6 தனிப்படைகளை அமைத்து போலீசார் தேடி வரும் நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து தகவல் தரவில்லை என கூறி வங்கியின் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வங்கி பணிக்கு வந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர்கள் உடைக்கப்பட்டு நகை பணம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக காமநாயக்கன் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதனை தொடர்ந்து காமநாயக்கன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வங்கியின் பின்புறம் இருந்த ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, திருப்பூர் மாவட்ட எஸ்பி திஷா மிட்டலுக்கும், பல்லடம் டிஎஸ்பி முருக வேலுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் டிஎஸ்பி மற்றும் திருப்பூர் எஸ்பி இந்த கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த விசாரணையில் வங்கியிலிருந்த 18 லட்ச ரூபாய் பணம் மற்றும் 500 பவுன் நகைகள் கொள்ளையடிக்க பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும் வங்கியில் வைத்திருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்தும், ஹார்டு டிஸ்க்குகளை திருடிச் சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த வங்கியில் ஜன்னல் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. அந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து வங்கிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது. இதனை அறிந்த மர்ம நபர்கள் வங்கிக்குள் புகுந்து கொள்ளையடித்து இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க மாவட்ட எஸ்.பி. திஷாமிட்டல் தலைமையில் 6 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அளிக்கவில்லை எனவும், கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் குறித்து தகவல் தரவில்லை எனவும் கூறி வங்கியின் முன்பு பல்லடம் தாராபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் வாடிக்கையாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.