திருப்பூர்: திருப்பூர் அருகே கேரள அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் பலியான நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து மாலை 5 மணிக்குள் ஒப்படைக்கப்படும் என கேரளா மாநில அமைச்சர் சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தும் கேரளாவிலிருந்து டைல்ஸ் கற்களை ஏற்றி சேலம் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் அவிநாசி அருகே கோவை சேலம் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 50 பேரில் கேரளாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா, மனசா என 5 பெண்கள் உட்பட 19 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனையை பார்வையிட்ட கேரள மாநில வேளாண்மை துறை அமைச்சர் சுனில் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசின் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முழு கவனத்தோடு செயல்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்காமல் குறைக்கப்பட்டது எனவும் தற்போது, 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து மாலை 5 மணிக்குள் ஒப்படைக்கப்படும் என்றார்.
மேலும், இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரியிலும், மற்ற நபர்கள் சிறு சிறு காயங்களுடன் திருப்பூர் மற்றும் கோவையில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இந்த சம்பவம் அறிந்தவுடன் கேரளாவிலிருந்து எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து துரிதமாக செயல்பட்டு வருகின்றனர் என்றும் லாரி ஓட்டுநர் மீது தமிழக காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் என்று கேரளா மாநில அமைச்சர் சுனில்குமார் தெரிவித்தார்.