கோவை: குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகளின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கோவை: குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகளின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல, கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் என இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோரிக்கைகளும் எழுந்து வந்தது.

இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமிக் கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தபடி ஒன்று கூடினர்.

இதைத்தொடர்ந்து கோவை இரயில் நிலையம் அருகே உள்ள பள்ளி வாசல் முன்பு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என வேறுபாடின்றி பேரணியாக கிளம்பிய இஸ்லாமியர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு 300 மீட்டருக்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து பேரணியாக வந்தவர்கள் சாலையில் அமர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பாஜக மற்றும் தமிழக அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை திரும்பபெற கோரியும் கோசங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து இஸ்லாமிய தலைவர்கள் ஒன்றுகூடி பேசி போராட்டத்தை அமைதியாகக் கலைந்து கொண்டனர்.

இந்த நிலையில், இந்த போராட்டத்தையொட்டி மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரன் தலைமையில் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் என மொத்தம் 1700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல 200க்கும் மேற்பட்ட அதிவிரைவு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.