கோவை: கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகே அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் பேருந்தை பயணி ஒருவர் தட்டிக்கேட்ட சம்பவத்தில் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தி பயணியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகே அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் பேருந்தை பயணி ஒருவர் தட்டிக்கேட்ட சம்பவத்தில் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தி பயணியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாகவே தனியார் பேருந்துகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக தனியார் பேருந்துகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை காரணமாக காட்டி, போட்டி போட்டுக்கொண்டு பேருந்தை இயக்கி வருகின்றனர். அதேபோல, இவர்களின் அதிவேக சாகசங்களால் பல உயிர்கள் பலியாகி உள்ளது.
இந்த நிலையில் இவர்களின் தொடரும் விதிமீறல்களை கட்டுப்படுத்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தனியார் பேருந்துகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும், என ஏற்கனவே வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளார். ஆனால் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவுகளை அமல்படுத்தாமல் இருப்பதால் தனியார் பேருந்துகள் தங்களின் இஷ்டத்திற்கு அடாவடித்தனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வீ வீ ( Vee Vee), என்ற பெயர் கொண்ட 86 ஆம் நம்பர் தனியார் பேருந்து அதிவேகமாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. இப்படியிருக்க பேருந்துக்குள் பயணித்த பயணி ஒருவர் பேருந்தை அதி வேகமாக இயக்க கூடாது என நடத்துனரிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் ரயில்வே ஸ்டேஷன் அருகே சாலையில் வண்டியை நிறுத்தி பயணியை சரமாரியாக தாக்கினர்.

இதை தொடர்ந்து சக பயணிகளும் பொதுமக்களும் எவ்வளவு தெரிவித்தும் கொஞ்சமும் இரக்கம் காட்டாத பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மற்றவர்களையும் மிரட்டினர்.
இதைத்தொடர்ந்து பேருந்தில் பயணித்த பயணிகள் கூறும்போது:
தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நூற்றுக்கு 90 சதவீதம் பேர் பயணிகளை இழிவு படுத்துகின்றனர். அதேபோல பயணிகளை தகாத வார்த்தையில் பேசுவது தாக்குவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
அதேபோல அவர்களின் அடாவடித்தனத்தை எதிர்த்து கேட்டால் சாலையின் நடுவில் பேருந்தை நிறுத்தி அடித்து வெளியேற்றுகின்றனர்.
இதுபோன்ற பல புகார்கள் வந்தும் காவல்துறையினர் பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டுவது வேதனையை ஏற்படுத்துகிறது.

மேலும், சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தி பயணியை தாக்கிய இந்த 86ம் நம்பர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
தொடரும் அத்துமீறல்கள்
பேருந்தில் 4க்கும் மேற்பட்ட நடத்துனர்கள் படிகளில் தொங்கிக் கொண்டும், பெண்கள் அமரும் இடத்தில் அமர்ந்தும் பயணிகளுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுத்து ஓய் வருகின்றனர்.
மேலும், பேருந்துகளில் வேண்டுமென்றே ஆபாசமான பாடல்களை அதிக சத்தத்தில் வைத்து பயணிகளை முகம் சுளிக்க வைக்கின்றனர். மேலும், அதிவேகமாக பேருந்துகளை இயக்கியும், விதவிதமாக ஹாரன் சத்தத்தை எழுப்பியும் பேருந்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை பொதுமக்கள் யாராவது தட்டி கேட்டால் அவர்களை மிரட்டுவது தாக்குவது என தங்களின் வலிமையை காட்டுகின்றனர். இந்த காரணங்களால் பொதுமக்கள் அனைவரும் தனியார் பேருந்துகளை கண்டால் நமக்கேன் வம்பு என ஒதுங்கி செல்கின்றனர்.