கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மத்திய சிறைச்சாலையில் குண்டர் தடுப்பு சட்ட கைதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள், வெடிகுண்டு வழக்கில் கைதான கைதிகள், மாவோயிஸ்ட்கள், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் மற்றும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 1800க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

மேலும், இந்த சிறைச்சாலையில் அவசர சிகிச்சைக்காக சிறை மருத்துவ பிரிவு உள்ளது. அதேசமயத்தில் சிறைவாசிகளுக்கு மேல் சிகிச்சைகள் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படும் சிறைவாசிகளுக்கு சிகிச்சைகள் அளிக்க வாரந்தோறும் சனிக்கிழமை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் (31) என்ற விசாரணைக் கைதியை நேற்று இரவு கோவை மத்திய சிறையில் இருந்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை சுப்பிரமணியம் மருத்துவமனையில் இருந்து திடீரென தப்பியோட முற்பட்டார்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலீசாரும் மருத்துவமனையின் தனியார் காவலர்களும் சுப்பிரமணியத்தை பிடிக்க முற்பட்டனர். ஆனால், அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார். இதைத்தொடர்ந்து தகவலறிந்த வந்த பந்தய சாலை சாலை போலீசார், விசாரணைக் கைதி சுப்பிரமணியத்தை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
போலீஸ் பிடியில் இருந்த கைதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நிலையில் தப்பியோடிய சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.