கோவை: கோவையில் வரும் 23ம் தேதி பாரம்பரிய ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை: கோவையில் வரும் 23ம் தேதி பாரம்பரிய ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மண்டல அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது என்றும் அதற்கு தேவையான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் விதிமுறைக்குட்பட்டு தடுப்புகள் அமைப்புகள், காயங்கள் ஏற்படும் பட்சத்தில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை நடைபெற்றதாக கூறிய அவர், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்க்க வாய்ப்புள்ளதாகவும் கோவையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது எனவும் மூன்றாவது ஆண்டாக இதை நடத்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பாக சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக வங்கி பணியாளர்கள் அழைக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாகவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 6.97 லட்சம் சுய உதவி குழுக்களில் 103.32 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் என தெரிவித்த அமைச்சர், 2011ம் ஆண்டிலிருந்து 63,879 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றார். கோவை மாவட்டத்தில் மட்டும் ஊரக பகுதிகளில் 5742 சுய உதவி குழுக்கள் உள்ளதாகவும் நகர்ப்புற பகுதிகளில் 4481 சுய உதவி குழுக்கள் என மொத்தம் 10,223 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார். இதில், கிட்டத்தட்ட 1961 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது என கூறிய அவர், இந்தாண்டு மட்டும் 405 கோடி ரூபாய் சுய உதவி குழுக்கள் வங்கிகள் மூலம் கடன் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகாலத்தில் வழங்கியுள்ளோம். ஏழைகளுக்கு அதிகளவில் இந்தியாவிலேயே கோவையில் வீடு கட்டி வழங்கும் திட்டம் மூலம் அதிகமாக வீடு கட்டி வழங்கப்பட்டுள்ளது. அதில், ரூ.2,10,000 ஏற்கனவே வழங்கினாலும், மீதம் தேவைப்படும் 1 முதல் 1.5 லட்சம் ரூபாய் வழங்கவும் வங்கிகள் தர இந்த ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக எடப்பாடி அரசால் நடத்தப்பட்டது என்றும் இந்த விழாவில், பணியாற்ற தஞ்சையை சேர்ந்த 365 பேர் நிரந்தர மற்றும் 250 பேர் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 615 பேர் மற்றும் தஞ்சை மண்டலங்கள் 18 நகராட்சிகள், மதுரை மண்டலங்களில் 8 நகராட்சிகள் சேர்த்து 664 பேர் என மொத்தம் 1272 பேர் 15 நாட்களாக இரவு பகலாக பணியாற்றியதால், 2007 மெட்ரிக் டன் தாவரக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது எனவும் 10 லாரிகள், 4 ஜே.சி.பி, 35 துப்புரவு ஆய்வாளர்கள், 42 துப்புரவு மேற்பார்வையாளர்கள் பணியாற்றியதாக தெரிவித்தார். மேலும், 1272 துப்புரவு பணியாளர்களுக்கு, தலா 1000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.