கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக முன்புறம் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக முன்புறம் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(48). இவர் ராஜவீதி பகுதியில் உள்ள டி.கே மார்க்கெட்டில் மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது குடும்பச் சொத்து பத்திரத்தை ராம்குமார் என்ற உறவினர் அடமானமாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வைத்துள்ளார். 5 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைப்பதாக சொல்லி 30 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மோகன்ராஜ், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள மாநகர குற்றப்பிரிவில் மோசடி புகார் அளித்தார். ஆனால் மோசடி புகாரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மோகன்ராஜ் நேற்று மீண்டும் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க போலீசாரை வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், காவல்துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால் மனமுடைந்த அவர், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முன்புறம் பிளேடால் கழுத்து, கை என மூன்று பகுதிகளில் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த பந்தய சாலை போலீசார், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முன் புறம் ஒருவர் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.