கோவை : ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபரை இருப்பு பாதை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை : ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபரை இருப்பு பாதை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சமீப காலமாகவே அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பறிக்கும் கும்பல்கள் அதிகரித்து வருகிறது. இந்த மோசடிக் கும்பல்களால் பல்வேறு நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான புகார்களும் காவல் நிலையங்களில் உள்ளது.
இந்த நிலையில் கோவையில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக இருப்புப்பாதை போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது ;
கடந்த 20ஆம் தேதி இருகூர் சாலை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60) என்பவர் கோவை இருப்புப்பாதை காவல் நிலையத்தில் போத்தனூர் ரயில்வே காலனியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் மீது புகார் ஒன்றை அளித்தார்.
மேலும் அந்தப் புகாரில் ஜெகநாதன் என்பவர் ரயில்வேயில் e.s.m. கிரேட் -1 ஆக பணியாற்றி வருவதாக சொல்லியதுடன், ரயில்வே உயரதிகாரிகளுடன் உள்ள பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ரூபாய் 18,56,700 ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
அதேபோல, அவரது இரண்டாவது மனைவி கல்பனா மூலம் வங்கிக்கணக்கில் தவணைமுறையில் 2015-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பணம் பெற்று உள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஜெகநாதன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இருப்புப்பாதை காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் காவல்துறைத் தலைவர் வனிதாவின் மேற்பார்வையில் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனிப்படையினர் ஜெகநாதனை கோவை அரசு மருத்துவமனை முன்பு வைத்து கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை விரைவாக கைது செய்த தனிப்படை போலீசாருக்கு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டுகளை தெரிவித்தார்.