கோவை : சென்னை மதுரை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நோயாளிகளுக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தி வந்த நிலையில், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கோவை : சென்னை மதுரை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நோயாளிகளுக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தி வந்த நிலையில், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சராசரியாக ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது, ஒரு நிமிடத்துக்கு 70 முதல் 100 வரை இருக்க வேண்டும். ஆனால், துடிப்பானது இதற்கு அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ உயிருக்கு ஆபத்து. இது போன்ற நிலையற்ற இதயத்துடிப்பை சீராக வைக்க இன்றைய மருத்துவத்துறை பேஸ்மேக்கர் கருவியை கண்டுபிடித்துள்ளது.
இந்த கருவியை பொருத்த தனியார் மருத்துவமனைகளில் 5 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஏழைகளும் பயன்படும் வகையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் பேஸ்மேக்கர் கருவியை பொருத்த தமிழக அரசு திட்டங்களை வகுத்துள்ளது. குறிப்பாக, பேஸ் மேக்கர் கருவி பொருத்த சென்னை,மதுரை போன்ற மருத்துவமனைகளில் மட்டுமே வசதிகள் இருந்த சூழலில் தற்போது கோவை அரசு மருத்துவமனையிலும் நோயாளிகள் பயன் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி குப்பண்ணன் என்பவருக்கு இந்த பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் கூறும் போது;-

சென்னை, மதுரை போன்ற அரசு மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்பட்டு வந்த இந்த நவீன பேஸ் மேக்கர் சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது. இந்த பேஸ் மேக்கர் கருவி பொருத்தியதன் மூலம் அவரது இருதய துடிப்பு சீராகி உள்ளது என்றார்.
மேலும், இதன் மூலம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ முடியும் என்றும் இதய துடிப்பு குறைந்தால் கருவியில் இருந்து மின்சக்தி கிடைக்கப் பெற்று இதய துடிப்பை அதிகரிக்க செய்யும் எனவும் இந்த பேஸ்மேக்கர் கருவி தேவையான நேரத்தில் மட்டுமே இயங்கும் எனவும் தெரிவித்தார்.