கோவை : கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி உயிர் தியாகம் செய்த காவலர்களை நினைவு கூறும் வகையில் காவலர் பயிற்சி மைதானத்தில் 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது.
கோவை : கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி உயிர் தியாகம் செய்த காவலர்களை நினைவு கூறும் வகையில் காவலர் பயிற்சி மைதானத்தில் 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது.
காவல்துறையில் பணியாற்றி, பணியின் போது இறந்த காவலர்களின் வீரத்தினை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி வீர வணக்கம் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை நினைவு கூறும் வகையில் காவல்துறையினர், சமூக அமைப்பினர் , மாணவர்கள் என பலர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கோவை மாநகர காவல் துறை சார்பில் காவலர் பயிற்சி மைதானத்தில் 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் அனுசரிக்கப்பட்டது. இதில், 1985ம் ஆண்டு கொள்ளை குற்றவாளியை பிடிக்கும் போது உயிரிழந்த காவலர் ராஜரத்தினம், 1997 ஆம் ஆண்டு பலி வாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்ட தலைமை காவலர் செல்வராஜ், மற்றும் 2011 ஆம் ஆண்டு விபத்து ஏற்படுத்தியவரை பிடிக்க முற்பட்டபோது உயிரிழந்த தலைமை காவல் சந்திரசேகரன் ஆகிய மூன்று பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரன் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்,துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, மக்களுக்காக உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் 21 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை செலுத்தினர்.