கோவை : கோவை புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் 9 வயது சிறுமி பலியான சம்பவத்தில் சிறுமியின் இறப்பிற்கு காரணம் டெங்கு காய்ச்சலே என மருத்துவர்கள் தெரிவித்ததாக உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கோவை : கோவை புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் 9 வயது சிறுமி பலியான சம்பவத்தில் சிறுமியின் இறப்பிற்கு காரணம் டெங்கு காய்ச்சலே என மருத்துவர்கள் தெரிவித்ததாக உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கோவை புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த பாபுவின் மகள் தீபிகா (9). இந்த சிறுமி மருதூர் மாநகராட்சி துவக்க பள்ளியில் படித்து வந்தார். இவர் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக கடந்த 16ம் தேதி உறவினர்களால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று காலை தீபிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவி உயிரிழந்ததையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் சிறுமியின் வீட்டருகே மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். தீபிகாவிற்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர் கூறினாலும், மருத்துவ சான்றிதழில் டெங்கு என குறிப்பிடாமல் டெங்கு உயிரிழப்புகளை மறைப்பதாகத் தெரிவித்த உறவினர்கள், பெரியார் நகர் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு மற்றும் கொசு தொல்லை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்தனர்.
மேலும், சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக உறவினர் மணிகண்டன் கூறும்போது ;
காய்ச்சல் பாதிப்பினால் கடந்த 16ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் தீபிகாவை அனுமதித்தோம். ஆனால் நேற்று காலை தான் மருத்துவர் ஒருவர் தீபிகாவிற்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை எங்களிடம் தெரிவித்தார். இதையடுத்து மருத்துவர் தெரிவித்து சில மணிநேரங்களில் தீபிகா உயிரிழந்துவிட்டார். நாங்கள் மருத்துவமனையிலிருந்து தீபிகாவின் உடலை வீட்டிற்கு எடுத்து வருவதற்கு முன்பே மாநகராட்சி பணியாளர்கள் கொசுமருந்து, பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை எங்கள் வீட்டருகே தெளித்து வைத்திருந்தனர். இருப்பினும் டெங்கு காய்ச்சல் என்பதை சொல்ல மாநகராட்சியும் மருத்துவமனை நிர்வாகமும் மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பெரியார் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில்:-
கொசுக்கள் அதிக அளவில் பரவி வருவதால் அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக கூறினர். மேலும், எங்கள் வீட்டருகே 9 வயது சிறுமி இறந்த விவகாரம் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் உடனடியாக கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு எங்கள் உயிர்களை காக்க வேண்டும் என தெரிவித்தனர்.