கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். வருவாய் துறை, கனிமவள துறை, கருவூலம், இ சேவை மையம், குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்புத் துறை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட துறை அலுவலகங்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். வருவாய் துறை, கனிமவள துறை, கருவூலம், இ சேவை மையம், குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்புத் துறை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட துறை அலுவலகங்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பருவமழை காலம் துவங்கியுள்ள நிலையில், காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு பொதுமக்கள் உள்ளாகி வருகின்றனர். பொது இடங்களில் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது, குப்பைகளை ஆங்காங்கே கொட்ட கூடாது, வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் தேக்கி வைக்க கூடாது, தொழிற் கூடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் ட்ரம், பழைய டயர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்தும் கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள எந்த உத்தரவையும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளே நடைமுறைப்படுத்தவில்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் வலது புறத்தில் தான் குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் துறை அலுவலகம் உள்ளது. அங்கு பயன்பாட்டில் இல்லாத அரசின் பழைய வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடியே குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், அந்த பகுதியை கடக்க முடியாமல் அரசு அலுவலர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதன் அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு, தினம்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் ஆதார் அட்டை பெறுவதற்கும், பெயர் திருத்தம், அலைபேசி எண் பதிவு செய்வதற்கு நீண்ட வரிசையில் நிற்கின்றனர். இந்த இ-சேவை மையம் செல்லும் வழியில் எலி இறந்து கிடந்து துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்து பொதுமக்கள் புகார் கூறியும் இதுவரை எலி அங்கிருந்து அப்புறப்படுத்தப்படவில்லை. கருவூலத்திற்கு வருபவர்கள் செல்லும் வழியில் உள்ள கழிவு நீர் தொட்டி மூடப்படாமல், டெங்கு நோயை பரப்பும் லார்வா எனப்படும் கொசு முட்டையும், புழுக்களும் அதிக அளவில் மிதந்து வருகின்றன. அந்த பகுதியை சுற்றிலும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.

அதேபோல, மக்கள் தொடர்பு அலுவலகம் செல்லும் வழியில், பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களின் அடிப்பகுதியில் குப்பைகள் தேங்கி, துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறி உள்ளது. இதன் பின்புறம் உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் அரிசி கடத்தலில் ஈடுபட்டு பிடிக்கப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்திலும், அதிக அளவில் குப்பைகள் நிறைந்து சுகாதாரமற்ற நிலை உள்ளது.

மேலும், கருவூலம் அருகே உள்ள பொதுக்கழிப்பிடம் பராமரிப்பு இல்லாத காரணத்தால் அதிக அளவில் துர்நாற்றம் வீசி வருகிறது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால், ஆங்காங்கே இரும்பு ட்ரம்களில் தண்ணீர் நிரப்பி வைத்து உள்ளனர். இந்த ட்ரம்களை கட்டிடத் தொழிலாளர்களும், ஒப்பந்ததாரரும் சரியாக பராமரிக்காமல் திறந்து வைத்திருப்பதால், டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதியாக ஆட்சியர் அலுவலக பின்புறம் உள்ளது.
ஊருக்கு பொதுமக்களுக்கும் உபதேசம் செய்யும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் முதலில் தங்கள் அலுவலக வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.