கோவை : உணவு டெலிவரி செய்யும் ஜோமேட்டோ நிறுவனம் ஒரு உணவு ஆர்டர் விநியோகம் செய்ய 30 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 25 ரூபாயாக குறைக்கப்பட்டதை கண்டித்து ஜோமேட்டோ ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜொமேட்டோ உணவு வழங்கும் நிறுவனத்தில் கோவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவு பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒரு உணவு ஆர்டர் விநியோகிக்க 40 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 30 ரூபாயாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், மேலும் 5 ரூபாய் குறைக்கப்பட்டு 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டதோடு, கோவையில் ஆறு மண்டலங்களாக உணவு விநியோகிக்கும் பகுதிகளை மூன்றாக குறைக்கப்பட்டது. இதனால் அதிக தூர பயணம், எரிபொருள் செலவு அதிகரிக்கும் நிலையில், கமிஷன் குறைக்கப்பட்டு இருப்பதாக ஜொமேட்டோ ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், இன்று உணவு விநியோகிக்கும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பந்தயசாலை பகுதியில் உள்ள ஜோமடோ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். போராட்டம் நடத்தியவர்களுடன் ஜோமடோ நிறுவனத்தினர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.