கோவை : கோவை தடாகம் பகுதியில் காற்று மாசை அளவிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கருவிகளை 6 மாதம் வரை நீட்டித்து அளவீடுகளை எடுத்தால் மட்டுமே உரிய மாசு அளவுகள் தெரியவரும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.
கோவை : கோவை தடாகம் பகுதியில் காற்று மாசை அளவிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கருவிகளை 6 மாதம் வரை நீட்டித்து அளவீடுகளை எடுத்தால் மட்டுமே உரிய மாசு அளவுகள் தெரியவரும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மனு ஒன்றை அவர்கள் அளித்தனர். அம்மனுவில் இந்த மாசு அளவிடும் கருவிகளை 6 மாதங்களை வரை தொடர்ந்து கண்காணித்து அதன் அளவீடுகளைக் குறிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தற்போது தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் மழை பெய்து வருவதால் காற்றில் இருக்கும் பேர் டஸ்ட் எனப்படும் மாசின் அளவு குறைவாக இருக்கும் என தெரிவித்தனர். மேலும், தற்போது செங்கல் சூளை அதிபர்கள் சூளைகளை இயக்காமல் இருப்பதாகவும் லாரிகளை இயக்காமல் இருப்பதாகவும் கூறிய அவர்கள், இதனால் நிச்சயம் மாசின் அளவுகளை முழுமையாக அளவிட முடியாது என கூறினர்.
எனவே, தற்போது எடுக்கப்படும் மாசு அளவுகளால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை எனக்கூறிய அவர்கள், 6 மாதங்கள் வரை நீட்டிக்கும் பட்சத்தில், மீண்டும் சூளைகள் இயக்கப்பட்டு, லாரிகளின் இயக்கமும் அதிகரிக்கும் போது உண்மையான அளவுகளை அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.
ஏற்கனவே, தடாகம் பகுதியில் மழையின் அளவு குறைந்துள்ளதோடு, தண்ணீர் ஓடைகள், வாய்க்கால்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்கள் செங்கல் சூளைகளுக்காக மண் எடுப்பதால், காய்ந்து போய் நீரின்றி இருப்பதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது எடுக்கப்படும் அளவீடுகளை கொண்டு நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தனர்.
கோவை தடாகம் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு அளவுகளை கணக்கிட 9 கிராமங்களில் காற்று மாசு அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.