கோவை : மாற்று பாலினத்தவர்களின் கல்வி, வாழ்க்கை மேம்பாட்டிற்காக செயல்படும் கோவை சகோதரி அறக்கட்டளை சார்பில் 'வானவில் சுயமரியாதை பேரணி' கோவையில் நடைபெற்றது.
கோவை : மாற்று பாலினத்தவர்களின் கல்வி, வாழ்க்கை மேம்பாட்டிற்காக செயல்படும் கோவை சகோதரி அறக்கட்டளை சார்பில் 'வானவில் சுயமரியாதை பேரணி' கோவையில் நடைபெற்றது.

கோவை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் துவங்கிய இந்த பேரணியானது சுமார் 2.5 கி.மீ., பயணித்து வ.உ.சி. மைதானத்தில் முடிவடைந்தது. ஒருபால் ஈர்ப்பு கொண்டோர், இரு பால் ஈர்ப்பு கொண்டோர், திருநங்கைகள் திருநம்பிகள் மட்டுமின்றி பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக நல அமைப்புகள் என பலர் தமிழ்நாடு மட்டுமின்றி கேரள, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர்.

சமீபத்தில், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மூன்றாம் பாலினத்தவர் மசோதாவில், யாரேனும் ஒரு நபர் மூன்றாம் பாலினரை வன்புணர்வு அல்லது வன்கொடுமை செய்தால் குற்றவாளிகளுக்கு 6 மாதம் முதல் 2 வருட சிறை தண்டனை வழங்கப்படும் என்ற அறிவிப்பை மாற்றவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனை போன்று கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், மாற்றுப்பாலினத்தவர் பாலியல் தொழில், பிச்சையில் ஈடுபடுவதற்கு குடும்பம் தான் காரணம் என்பதையும், குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் இந்த பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ஒருபால் ஈர்ப்பு சட்டப்படி குற்றம் இல்லை என்று தீர்ப்பிற்கு பிறகு மாற்றுப்பாலினத்தவர் சமூகம் முன்பு அச்சமின்றி வெளியே வரும் சூழல் உருவாகி உள்ளதை கொண்டாடும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் LGBTக்கென தனியாக பணி வழங்குவதும் அதிகரித்துள்ளது போன்றவற்றை பொதுமக்கள், மாற்றுப்பாலினத்தவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பேரணி நடத்தப்பட்டதாக பேரணியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

பேரணியின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியவாரு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். தீவிரவாத அச்சுறுத்தல் இருந்ததால் கடந்த மாதம் 24ஆம் தேதி நடக்க வேண்டிய இந்த பேரணி, இன்றைய தினம் நடத்தப்பட்டதாகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற மாற்றுப்பாலினத்தவர் பேரணி கோவையில் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.