கோவை : கெட்டுப்போன சமோசா குறித்து கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பிய நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உரிய விசாரணை செய்யக் கோரி புகார் அளித்துள்ளனர்.
கோவை : கெட்டுப்போன சமோசா குறித்து கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பிய நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உரிய விசாரணை செய்யக் கோரி புகார் அளித்துள்ளனர்.

கோவை தடாகம் அருகே உள்ள ஆனைக்கட்டி அஞ்சல் ஆலமரமேடு பகுதியில் வசித்து வருபவர் செல்வத்தின் மனைவி ஜெயந்தி (46). இவர் அங்குள்ள தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் தடாகம் பகுதியில் உள்ள நூர் முகம்மது என்பவருக்கு சொந்தமான கடையில் சமோசா வாங்கியுள்ளார். இதையடுத்து சமோசாவை ஜெயந்தியும் அவரது நிறுவனத்தில் பணி புரிபவர்களும் சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சமோசா கெட்டுப் போயுள்ளதால் அதை உண்டவர்கள் தொடர்ந்து வாந்தி எடுத்து வந்துள்ளனர். அதேபோல இதில் தனபாக்கியம் என்பவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் சமோசா குறித்து கடை உரிமையாளர்களிடம் ஜெயந்தி தரப்பினர் கேள்வி எழுப்பிய போது தெரியாமல் நடந்து விட்டதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர். இதனையடுத்து உள்ளூருக்குள் பிரச்சனை வேண்டாம் என கருதிய ஜெயந்தி தரப்பினர் எந்த புகாரும் அளிக்கவில்லை.

இப்படியிருக்க கெட்டுப்போன சமோசா விற்பனை தொடர்பாக புகார் அளிக்காமல் இருக்க ஜெயந்தி மற்றும் தனபாக்கியம் இருவரும் மூன்றாயிரம் ரூபாய் வாங்கி விட்டு மீண்டும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அதேபோல கடையில் இருந்த பெண்ணை தாக்கியதாகவும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெயந்தி மற்றும் ஜம்பு கண்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயந்தி கூறும்போது :-
நான் எந்த தவறும் செய்யாத போது எப்படி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் மிரட்டியதாகவும் பணம் பறித்ததாகவும் பொய் சொல்கிறார்கள். அதேபோல, என்னிடம் இதுவரை போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை. ஆனால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
என் வழக்குப்பதிவுக்குக்கு காரணம் மேலிடத்து பிரஷர் என்கிறார்கள். ஆகவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த பொய் வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தீர்வு தர வேண்டும் என தெரிவித்தார்.
அதேபோல ஜெயந்தி ஜம்பு கண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்தியதால் தான் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு கோவை சட்டமன்ற
தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தரப்பு தூண்டுதலே காரணம் எனவும் புகார் அளிக்க வந்தவர்கள் தெரிவித்தனர்.