கோவை : ஈஷா யோகா மையத்திற்கு கேரளாவிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களிடம் காருண்யா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் அனைத்து நபர்களும் ஹெல்மெட் அணிந்து இருந்தும் அவர்களிடம் 100 ரூபாய் பெற்றதாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : ஈஷா யோகா மையத்திற்கு கேரளாவிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களிடம் காருண்யா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் அனைத்து நபர்களும் ஹெல்மெட் அணிந்து இருந்தும் அவர்களிடம் 100 ரூபாய் பெற்றதாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டவர் என தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் ஹெல்மெட்டுகள் அணிந்தபடி அனைத்து ஆவணங்களுடன் ஈஷா யோகா மையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, காருண்யா காவல் நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாரன், இளைஞர்களிடம் அனைத்து ஆவணமும் சரியாய் இருந்தும் அவர்களிடம் தகவல்களை வாங்கிக்கொண்டு, தலைக்கு நூறு ரூபாய் என ஆறுபேர் 600 ரூபாய் கொடுத்துச் செல்லும்படி தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இளைஞர்கள் நாங்கள் கேரளாவில் இருந்து வருகிறோம் .அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்து ஹெல்மெட் அணிந்து வந்துள்ளோம். இருப்பினும் எங்களிடம் பணம் கேட்கிறீர்களே என தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த உதவி ஆய்வாளர் அனைவருக்கும் சேர்த்து 100 ரூபாய் கொடுத்துச் செல்லுங்கள் என பிடிவாதமாய் கேட்டுள்ளார். பணத்தை கொடுத்துவிட்டு இடத்தை விட்டு கிளம்பும் படியும் வற்புறுத்திய அவர், எல்லாம் சுற்றி பார்க்கிறீர்களே பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞர்கள் நூறு ரூபாயை எடுத்து உதவி ஆய்வாளரிடம் கொடுத்துள்ளனர். பின்னர் உதவி ஆய்வாளர் மாரன் பணத்தை வாங்கி தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, அவர்களை அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், அங்கு வந்த இளைஞர் ஒருவர், மறைமுகமாக எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து ஈஷா வந்த கேரளாவை சேர்ந்த ஜான் கூறும்போது;
நாங்கள் விடுமுறை நாட்களில் அடிக்கடி ரைடர்ஸ் செல்வது வழக்கம். இப்படி வெளி மாநிலங்கள் வரும் போது அனைத்து ஆவணத்தின் ஒரிஜினலையும் கையில் வைத்து கொள்வோம். அதேபோல, ஈஷா மையத்திற்கு நாங்கள் அனைத்து ஆவணங்களுடன் 5 பைக்கில் 7 பேர் என அனைவரும் ஹெல்மெட் அணிந்தே வந்தோம். இருப்பினும், போலீசார் எங்களிடம் பல்வேறு காரணம் சொல்லி கடைசியாக 100 ரூபாய் வாங்கி கொண்டு தான் அனுப்பினர். இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நாங்கள் எடுத்த வீடியோக்களை சமூக வளைதளத்தில் பதிவிட்டோம் என்றார்.
இதைத்தொடர்ந்து இந்த வீடியோ காட்சிகள் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்;
கேரளாவிலிருந்து ஈஷா வந்த இளைஞர்களில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்தவர்கள் ஹெல்மெட் அணியவில்லை. இதனால் உதவி ஆய்வாளர் அவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தார் என்றும் இதற்கான ரசீதும் கொடுத்துள்ளார். ஆனால் இது தவறாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இந்த வீடியோக்கள் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.