கோவை : 2019-20 ஆண்டிற்கு 2.58 கோடி கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக உதவி இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை : 2019-20 ஆண்டிற்கு 2.58 கோடி கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக உதவி இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியடிகளின் 151வது பிறந்த நாள் விழா மற்றும் கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா அவிநாசி சாலை மேம்பாலம் அருகில் உள்ள தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கலந்து கொண்டு காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதவி இயக்குனர் சுரேஷ் கூறுகையில், கடந்த ஆண்டு கதர் விற்பனை 1.20 கோடி ரூபாய்க்கும் கிராம பொருட்கள் ரூ. 75 லட்சம் என இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு 2.58 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர், பட்டு, பாலியஸ்டர் ரக வகைகளுக்கு 30 சதவீதமும் உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்புத் தள்ளுபடியை அரசு அளித்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு பட்டு சேலை விற்பனை ரூ. 60 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறியவர், இந்த ஆண்டு விற்பனை மேலும் அதிகரிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
மேலும், தீபாவளியை முன்னிட்டு ஊராட்சி ஒன்றியம், அரசு மருத்துவமனைகள், அரசு போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் பதினைந்து தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் அமைத்து வரும் நவம்பர் 30ம் தேதி வரை விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரை முருகன், தெற்கு வட்டாட்சியர் தேவநாதன், வடக்கு வட்டாட்சியர் மகேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.