கோவை : மனித கழிவுகளை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இதுவரை கோவையில் 19 துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்துள்ளதாக சஃபை கரம்ச்சாரியின் தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹிரேமணி(Jagadish Hiremani) தெரிவித்தார்.
கோவை : மனித கழிவுகளை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இதுவரை கோவையில் 19 துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்துள்ளதாக சஃபை கரம்ச்சாரியின் தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹிரேமணி(Jagadish Hiremani) தெரிவித்தார்.
ஜென்ரொபோடிக்ஸ் உருவாக்கிய மனித கழிவுகளை சுத்தம் செய்யும் ரோபோவான பாண்டிகூட் வி 2.0 (Bandicoot V2.0), இருகூரில் உள்ள ஹெச்பிசிஎல் டிப்போவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரோபோவை இந்திய அரசு சஃபை கரம்ச்சாரியின் தேசிய ஆணையத்தின் உறுப்பினர் (Member of National Commission of Safai Karamchari, Government of India) ஜெகதீஷ் ஹிரேமணி திறந்து வைத்தார்.

32 லட்சம் விலை கொண்ட இந்த ரோபோ இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தால் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்படுகிறது. பாண்டிகூட் ரோபோவானது புதன்கிழமை கோவை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஹிரேமணி, பாண்டிகூட் ரோபோ எளிதில் கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், வேலையை மிக விரைவாக முடிக்கும் என்றவர், இதுவரை, தமிழகத்தில் 173 பேர் சாக்கடையை 'கைமுறையாக' சுத்தம் செய்து இறந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
கழிவு நீர் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் அதிக இறப்பு விகிதம் உள்ளதாக கூறினார்.
பாண்டிகூட் ரோபோ நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சுகாதாரத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் கழிவு நீர் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் என்றார்.
அனைத்து மாநில அரசுகளும் 2022க்குள் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான ஆயுள் தீர்வுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், இந்தத் திட்டத்தின் கீழ், தற்காலிக சுகாதாரத் தொழிலாளர்கள் நிரந்தர ஊழியர்களாக மாற்றப்படுவார்கள் என்றார்.
கேரளாவை சேர்ந்த விமல் கோவிந்த் எம்.கே, அருண் ஜார்ஜ், நிகில் என்.பி., மற்றும் ஜென்ரோபோடிக்ஸ் நிறுவனத்தை நிறுவிய ரஷீத் பின் அப்துல்லா கான் ஆகியோரின் பொறியாளர்கள் குழு பாண்டிகூட் ரோபோவை வடிவமைத்துள்ளது. 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் பாண்டிகூட்டின் முதல் வெற்றிகரமான சோதனை நடத்தப்பட்டது என்றும் பின்னர் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதாக கூறினார்.
கடந்த ஆண்டு, மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் முன்னிலையில் இந்த குழு சாதனத்தின் சமீபத்திய பதிப்பான பாண்டிகூட் 2.0 ஐ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், முழுமையான தானியங்கி இயந்திரமான இதன் மூலம், ஹைட்ரஜன் சல்பேட் மற்றும் மீத்தேன் போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களைக் கண்டறிய முடியும் என்றார்.
ரோபோ குறித்து பேசிய ஜென்ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் விமல் கோவிந்த், திருவனந்தபுரத்தைத் தொடர்ந்து, கும்பகோணம், தூத்துக்குடி மற்றும் தற்போது கோவை ஆகிய இடங்களில் பாண்டிகூட் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இந்த வகை ரோபோக்கள் மனிதர்களை விட மிகக் குறைந்த நேரத்தில் மனித கழிவுகள் மற்றும் சாக்கடைகளை திறம்பட சுத்தம் செய்ய வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதனை எளிதாக இயக்க முடியும் என்று கூறிய விமல், இதன் மூலம் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்படும் இறப்புகளை தடுக்கலாம் என்று கூறினார்.
மார்ச் 2019ல் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை அறிக்கையின்படி, 1993 முதல் 2019 வரை 405 பேர் கழிவு நீர் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.