கோவை : மேட்டுப்பாளையம் ரோடு எருக்கம்பெனி ஜீவா நகரில், வீட்டை காலி செய்யும் போது, மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையம் ரோடு எருக்கம்பெனி ஜீவா நகரில், வீட்டை காலி செய்யும் போது, மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு எருக்கம்பெனி ஜீவா நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான 60 அடி ரோட்டில் கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக 252 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இந்த வீடுகளுக்கு மின் இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இங்கு வசிப்போருக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் கீரணத்தம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, அங்கு வீடும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இப்பகுதி மக்கள் அங்கு செல்ல மறுத்து, தொடர்ந்து இங்கேயே குடியிருந்து வந்தனர். சிலருக்கு வீடுகள் இன்னமும் ஒதுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் துணையுடன் இன்று ஜீவா நகர் சென்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜீவா நகர் பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வெள்ளிக்கிழமை வரை வீடுகளை இடிக்க அவகாசம் கேட்டனர். இதனை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வரை அவகாசம் அளித்து திரும்பிச் சென்றனர்.
கோவை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இறுதி காலக்கெடுவை அறிவித்ததால், ஒரு சில குடியிருப்பாளர்கள் சமாதானமாகி, கீரணத்ததில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுக்கு குடியேற முடிவு செய்தனர்.
அப்போது, குடியிருப்பாளர்களில் பாப்பாத்தி என்பவரது வீட்டை காலி செய்யும் போது, அவரது உறவினர்களான வெங்கிட்டாபுரம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ஜெயராம் (29) மற்றும் காரமடை மங்கலக்கரைப்புதூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு (19) ஆகிய இளைஞர்கள் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினரும், மின்சார வாரிய ஊழியர்களும் மின்சாரத்தை நிறுத்தி விட்டு, இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் தான் இளைஞர்கள் இருவரும் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் மேட்டுப்பாளையம் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த துணை காவல் ஆணையர் பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கலைத்தனர்.
கவுண்டம்பாளையத்தில் உள்ள ஜீவா நகரில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் மொத்தம் 247 வீடுகள் இருந்தன, அவற்றில் 145 ஏற்கனவே குடிசை மாற்று வாரியத்தால் வெளியேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 100 வீடுகள் இன்னும் வெளியேற்றப்படாதது குறிப்பிடத்தக்கது.