கோவை : பேரூர் படித்துறையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வரும் பொதுமக்கள் நொய்யல் ஆற்றில் குப்பைகளைத் தடுத்து அதனை நீக்கும் பணியில் சமூக ஆர்வலர்களும் மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை : பேரூர் படித்துறையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வரும் பொதுமக்கள் நொய்யல் ஆற்றில் குப்பைகளைத் தடுத்து அதனை நீக்கும் பணியில் சமூக ஆர்வலர்களும் மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை அன்று வரும் மஹாளய அமாவாசை அன்று முன்னோர்கள் நினைவாக பொதுமக்கள் நீர் நிலைகளில் தர்ப்பணம் தருவது வழக்கம்.

அந்த வகையில் இன்று பேரூர் படித்துறை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வருகின்றனர்.

எள் மற்றும் உணவுடன் பூ, பழங்கள் ஆகியவற்றை ஆற்றில் விட்டும், கற்பூரம் காட்டியும் பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதனால் பேரூர் கோவில் பகுதியில் மக்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது.
இதனிடையே, தர்ப்பணம் அளிக்க வரும் பொதுமக்கள் தங்களுடன் கொண்டு வரும் பழைய வாடிய பூக்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களையும் ஆற்றில் விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் நொய்யல் ஆற்றின் நீர் மாசுபடுவதோடு சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படுகிறது.

இதனைத் தடுக்கும் வகையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின், பேரூர் படித்துறை பாதுகாப்புக் குழுவை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் கோவை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒலிபெருக்கி மூலமாக குப்பைகளை ஆற்றில் விட வேண்டாம் என அறிவுறுத்தும் தன்னார்வலர்கள், குப்பைகளை விட வரும் பொதுமக்களிடம் இருந்து அதனை சேகரித்து தங்களிடம் உள்ள பைகளில் அதனை சேகரித்து வருகின்றனர். மேலும் ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.
முன்னோர்களை நினைவு கொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவு அவர்கள் விட்டுச்சென்ற இயற்கை வளங்களை அதே தூய்மையோடு அடுத்த தலைமுறைக்கும் விட்டுச்செல்வதும் அவசியம் என்பதை இந்த இளைஞர்கள் வலியுறுத்துவது அங்கு வந்து செல்லும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நொய்யல் படித்துறையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுத்தமாகவும் தூய்மையோடும் வைத்திருக்க உதவிபுரிந்த அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன் அவர்களுக்கும், பேரூராட்சிக்கும் மாணவர்களுக்கும், கோவை குளங்கள் அமைப்பின் தன்னார்வலர்களுக்கும், இவர்களை ஒருங்கிணைத்த பேரூர் படித்துறை பாதுகாப்பு அமைப்புக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.