கோவை : கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் நேற்று குளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத கிடங்கிற்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் நேற்று குளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத கிடங்கிற்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் சஞ்சீவி (23).இவர் ஒண்டிபுதூர் அருகே உள்ள ஜெயம் ஆட்டோமொபைல் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்திற்கு காரணம் நிர்வாகத்தின் வேலைப்பளுவே என சஞ்சீவி நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நிர்வாகத்தினர் சஞ்சீவியை வேலையை விட்டு நிறுத்துவதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து கடந்த 20ஆம் தேதி சஞ்சீவியும் அவரது தாயார் அருள் மொழியும் வேலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஜெயம் ஆட்டோமொபைல் நிர்வாக அலுவலகத்திற்கு சென்று உள்ளனர்.
ஆனால் நிர்வாகத்தினர் இவர்களை சந்திக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து சஞ்சீவி மேலாளரை எப்படியாவது சந்தித்து பேசி வருகிறேன் என தனது தாயாரை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். ஆனால் சஞ்சீவி இரவாகியும் வீடு திரும்பவில்லை.
அதேபோல சுமார் 11 மணி அளவில் சஞ்சீவி தனது தாயாரிடம் தான் வீட்டிற்கு விடுவேன் எனவும் போன் செய்து தகவல் சொல்லியுள்ளார்.
ஆனால் இரவாகியும் வீடு திரும்பாததால் சஞ்சீவியின் பெற்றோர் 21ஆம் தேதி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் சஞ்சீவி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று அவர் வாளாங்குளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து பந்தய சாலை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இறந்த இளைஞரின் உறவினர்கள் அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல வேலை தொடர்பாக மேலாளரை சந்தித்து வருகிறேன் என சொல்லி தற்போது பிணமாக கண்டெடுக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி பிரேத கிடங்கிற்கு முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் போலீசார் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.