கோவை : தமிழக – கேரளா எல்லைப்பகுதிகளில் சினை மாடுகளைக் குறிவைத்துத் திருடும் கும்பல்களால் மாடுகளை இழந்த அப்பகுதி விவசாயிகள், காவல்துறை மெத்தனப்போக்கைக் கைவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை : தமிழக – கேரளா எல்லைப்பகுதிகளில் சினை மாடுகளைக் குறிவைத்துத் திருடும் கும்பல்களால் மாடுகளை இழந்த அப்பகுதி விவசாயிகள், காவல்துறை மெத்தனப்போக்கைக் கைவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை எல்லையில் அமைந்துள்ள தமிழக – கேரளா எல்லையான நவக்கரை, மாவூத்தம்பதி, வாளையார் அணை பகுதிகளில் தக்காளி, மிளகாய், வாழை, கடலை, பயறு வகைகள் பெரும் அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ள இந்த பகுதியில் கால்நடை வளர்ப்பும் மிகவும் முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி செய்யப்படும் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், கால்நடை வளர்ப்பு மூலாதாரமான பால் விற்பனையே, அப்பகுதி விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இதற்காக, ஒவ்வொரு விவசாய தோட்டத்திலும் ஆடு, மாடுகள் மற்றும் கோழிகள் வளர்க்கப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதிகளில் சமீப காலமாக விவசாயிகள் வளர்க்கும் மாடுகளில், சினை மாடுகளைக் குறிவைத்து சில மர்ம கும்பல் திருடிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால், விவசாயிகள் சினை மாடுகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
வாளையார் அணை பகுதி தோட்டத்தைச் சேர்ந்த பலசுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த கன்று ஈன்று, இரண்டு நாட்களே ஆன பசுவை சில மர்ம நபர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் திருடிச் சென்றுள்ளனர். அதே நாளில், சின்னச்சாமி என்ற விவசாயிக்கு சொந்தமான 3 சினை மாடுகளும் திருப்படுள்ளதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். இது தொடர்பாக பலசுப்பிரமணி க.க.சாவடி காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி என்பவரது பசு மாடு ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மறுநாளே, செல்வகுமார் என்ற விவசாயிக்குச் சொந்தமான ஒரு மாட்டையும் பகல் நேரத்தில் மர்ம நபர்கள் பிடித்து சென்றனர். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து ராஜி என்பவருக்கு சொந்தமான மூன்று மாடுகளை திருட முயன்ற போது நாய் குரைத்ததால் திருட வந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் அதே பகுதியைச் சேர்ந்த கைலாச மூர்த்தி என்ற விவசாயிக்குச் சொந்தமான சினை மாட்டை சிலர் திருடி சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து மாடுகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விவசாயி பலசுப்பிரமணி பேசுகையில்:
எங்கள் பகுதியைப் பொறுத்தவரை விவசாயம் மட்டுமே பிரதான தொழில். கடந்த சில மாதங்களுக்கு முன் போதிய மழையில்லாமல் விளைச்சல் மிகவும் குறைவாக இருந்தது. ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்தோம். இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை அதிகளவு பெய்ததால் இரண்டு நாட்களில் வாளையார் அணை முழு கொள்ளளவு நிறைந்துள்ளது. இந்த மழையால் தக்காளி, மிளகாய் அழுகி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், நாங்கள் வளர்க்கக்கூடிய கால்நடைகள் மட்டுமே எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறது.
சமீபகாலமாக, எங்கள் பகுதியில் சினை மாடுகளை மட்டுமே குறி வைத்து மர்ம கும்பல் மாடுகளை திருடும் வேலையைச் செய்து வருகின்றனர். இதனால் செய்வதறியாது நாங்கள் தவிக்கின்றோம். கடும் பொருளாதார நெருக்கடி இருந்த போதும் நாங்கள் கால்நடைகளை கண் போல் காத்து வந்தோம். இப்படி மாடுகள் ஒன்றன் பின்பு ஒன்றாக திருடப்பட்டு வருவது பெரும் நஷ்டத்தை மற்றும் மன உளைச்சலை எங்களுக்கு தந்துள்ளது.

மேலும், தனது தோட்டத்தில் 15 மாடுகள் உள்ளதாகவும் அதில் தேர்ந்தெடுத்துச் சினை மற்றும் கன்று ஈன்று இரண்டு நாட்கள் ஆன மாட்டை மட்டும் மர்ம நபர்கள் திருடிச் சென்றதால், புதிதாய் ஈன்ற கன்று குட்டியை வளர்க்க மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தாயை பிரிந்து வாழும் கன்றுக்கு வேறு மாட்டை பால் குடிக்க வைக்க பல்வேறு சிரமங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து, அப்பகுதி செல்வகுமார் சாமி கூறுகையில், இந்த திருட்டு கும்பல் சினை மற்றும் கறவை மாடுகளை குறிவைத்துத் திருடுவதாகவும், இது தொடர்பாகப் புகார் அளித்தால் க.க சாவடி காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டினார். மேலும் வாகன சோதனை சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கண்காணித்து இந்த கும்பலை கண்டுபிடிக்க வேண்டும் என்றவர், மாடுகள் திருடப்பட்டதாக புகாரளித்தால் காவல்துறையினர் முதல் தகவலறிக்கை பதிய காலம் தாழ்த்தி வருவதாகவும், பலமுறை காவல் நிலையம் சென்று கூறியும் இதுவரை முதல் தகவலறிக்கை பதிவு செய்யவில்லை, என்றார்.

மேலும், வேலந்தாவளம் சோதனை சாவடியில் இரவு நேரங்களில் மின்சார இணைப்பு இல்லாததால் கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை. இதனால் எந்த பதிவுகளையும் கண்டறிய முடியவில்லை, எனவும் வேதனையோடு தெரிவித்தார்.
மேலும், விவசாயி ஒருவர் பேசுகையில், "மாடுகள் அடிக்கடி திருடப்படுவதால் போலீஸார், தமிழக – கேரளா எல்லைகளில் அடிக்கடி ரோந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல் துறையால் மட்டுமே நாங்கள் பாதுகாப்போடு இருப்போம்", என்றார்.
மாநில எல்லையில் வாழும் நாங்கள் தினம் தினம் மரண பயத்தோடு வாழ்கிறோம். இன்று கால்நடைகளைத் திருடுபவர்கள், விளையாடும் குழந்தைகளை திருடமாட்டார்கள் என்பதை உறுதிபட சொல்ல முடியாது. அச்சமின்றி வாழ, தமிழக அரசு நடவடிகைள் எடுத்தால் மட்டுமே உயிர் பயம் நீங்கி மக்கள் வாழ முடியும் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இங்கு திருடப்பட்ட மாடுகள் கேரளாவில் பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறும் விவசாயிகள், காவல்துறையினருக்குத் தெரிந்தே இந்த திருட்டு சம்பவம் நடைபெறுவதாக சந்தேகம் எழுவதாக கூறினர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்பதே அங்குள்ள விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.