கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சி நீரேற்று வளாகத்தில் இருந்த மரங்களை அதிகாரிகளின் துணையுடன் வெட்டி கடத்திய கும்பல், நகராட்சி ஆணையாளர் அந்த வழியாக ரோந்து சென்ற போது சிக்கியதால் கடத்தலுக்குத் துணையாக இருந்ததாக நகராட்சி ஊழியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சி நீரேற்று வளாகத்தில் இருந்த மரங்களை அதிகாரிகளின் துணையுடன் வெட்டி கடத்திய கும்பல், நகராட்சி ஆணையாளர் அந்த வழியாக ரோந்து சென்ற போது சிக்கியதால் கடத்தலுக்குத் துணையாக இருந்ததாக நகராட்சி ஊழியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 33 வார்டு பகுதிக்கும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீரில் எடுக்கப்பட்டு சாமன்ன வாட்டர் ஹவுஸ் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீரேற்று நிலையம் கடந்த 1941ம் ஆண்டுக்கு முன்னர் இருந்தே செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த நீரேற்று நிலையத்தில் பழமையான வேம்பு, அரசன், அசோக மரங்கள் உள்ளன. தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஆற்றோர பகுதி என்பதால் இந்த வளாகத்தில் அன்னியர் யாரும் நுழையாமல் இருக்க பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது.
மேலும், இதனை நகராட்சி சூப்பரண்ட் தலைமையில் சிப்ட் வகையில் இரவு பகலாக நகராட்சி ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இப்படி இருக்க வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேட்டுப்பாளையம் சாமன்ன நீரேற்று நிலையத்தில், இங்கு நகராட்சி ஊழியராக பணியாற்றி ரங்கராஜ், சில உயர் அதிகாரிகளின் தூண்டுதலால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் திருட்டுத்தனமாக மரம் வெட்டும் கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு இந்த வளாகத்தில் இருந்த வேம்பு, வாகன், மற்றும் பிளவர் மரம் என மூன்று மரங்களை வெட்டி அதனைக் கடத்தியுள்ளனர்.
பல லட்சம் மதிப்புடைய அந்த மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டுகொள்ளாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாறாக வெட்டிய மரங்களை பெரும்பாலும் எடுத்து வியாபாரம் செய்து விட்ட நிலையில், திடீரென அந்த பகுதிக்கு ரோந்து சென்ற நகராட்சி ஆணையாளர் அதனைப் பார்த்து கேட்டுள்ளார். பின்னர், மாறி மாறி மழுப்பிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்வதறியாது நின்றனர்.
இது குறித்து விசாரித்த நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், உடனடியாக அப்போது பணியில் இருந்த நகராட்சி ஊழியர் ரங்கராஜை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டுமே தனியாகச் செய்யக் கூடிய நிகழ்வாக இது இருக்க வாய்ப்பில்லை எனவே, மரம் வெட்டப்பட்டுக் கடத்த உறுதுணையாக இருந்த உயர் அதிகாரிகள் யார் யார் என கண்டறிந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.