கோவை : பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் குற்றவாளியை அடிதடி வழக்கில் கைது செய்து கோவை அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் நேற்று இரவு குற்றவாளி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் குற்றவாளியை அடிதடி வழக்கில் கைது செய்து கோவை அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் நேற்று இரவு குற்றவாளி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட ஆலாந்துறை காவல் எல்லைக்கு உட்பட்ட பூளுவாம்பட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கும் இந்த முகாமில் சட்டவிரோத சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
அதேபோல 3ம்-நம்பர் லாட்டரி விற்பனையும் இந்த முகாமில் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.
இந்த அகதிகள் முகாமில் வாழும் மக்கள் தங்களின் சொந்த நாட்டை விட்டு இங்கு வந்தும், முகாமில் இருக்கும் சமூக விரோதிகளால் பொருளாதாரத்தில் பின்தங்கி நிம்மதி இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோல இந்த சமூக விரோதிகளின் செயல்களால் இந்த முகாமில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது.
இப்படியிருக்க நேற்று 3ம் நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வரும் சிவனேசன் என்பவருக்கும் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய விஜயராஜ் (23) என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சிவனேசன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் தகவலறிந்து வந்த ஆலாந்துறை போலீசார் விஜயராஜை கைது செய்தனர்.
பின்னர் காயமடைந்த விஜயராஜுக்கு கோவை அரசு மருத்துவமனையில் காவல்துறையின் பாதுகாப்போடு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் முதலுதவி சிகிச்சைகள் முடிந்து எக்ஸ்ரே எடுக்க செல்லும் பொழுது விஜயராஜ் காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடினார்.
இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் விஜயராஜை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்த போலீசார் மருத்துவமனையில் வைத்து தவற விட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைத்த போலீசார், கோவை அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.